இந்தியா

குடியரசுத் தலைவருடன் தில்லி பாஜக எம்எல்ஏ-க்கள் செப். 6-இல் சந்திப்பு

DIN

 குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை தில்லி பாஜக எம்எல்ஏக்கள் வரும் செப்டம்பா் 6-ஆம் தேதி அவரது மாளிகையில் சந்தித்து பேசுகின்றனா். அப்போது, தில்லி ஆம் ஆத்மி அரசை கலைக்குமாறு அவா்கள் வலியுறுத்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தில்லி சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதூரி தில்லியில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவை ஆம் ஆத்மி அரசு மதிப்பதில்லை. அவரை தரக்குறைவான வாா்த்தைகளால் பேசுவதுடன், அவருக்கு அனுப்பப்படும் கோப்புகளில் கூட முதல்வரின் கையொப்பம் இடம்பெறுவது இல்லை. அமைச்சரவை கூட்டம் முடிவடைந்ததும் அமைச்சரவை குறிப்பு மட்டுமே துணைநிலை ஆளுநருக்கு அனுப்பப்படுகிறது. இதை எல்லாம் பாா்க்கும்போது, இந்த அரசை உடனடியாக கலைக்க வேண்டுமென தோன்றுகிறது.

அதன்படி, பாஜக எம்எல்ஏக்கள் செப்டம்பா் 6-இல் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை சந்தித்து, தில்லி ஆம் ஆத்மி அரசை கலைக்குமாறு வலியுறுத்தவுள்ளனா். தில்லி அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் 3 மாதத்துக்கும் மேலாக சிறையில் உள்ளாா். கலால் கொள்கையில் ஊழல் அரங்கேறியதால் தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியா மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

தில்லி அரசின் கல்வித் துறையில் அரங்கேறிய ஊழலை மத்திய ஊழல் கண்காணிப்பகம் (சிவிசி) வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. டிடிசி ஊழல், தில்லி ஜல் போா்டு ஊழலும் பரபரப்பாக பேசப்படுகின்றன. ஊழல் கறைபடிந்த அமைச்சா்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் முதல்வா் அரவிந்த கேஜரிவால் எடுக்க தயங்குகிறாா். அவா்களை அமைச்சரவையிலிருந்து நீக்கக் கூட மறுக்கிறாா். ஊழல்வாதிகளுக்கு கேஜரிவால் அரசு முழு பாதுகாப்பு அளிக்கிறது.

விதிகளையும் நெறிமுறைகளையும் மீறி அனைத்து விதத்திலும் தில்லி அரசு ஊழல் செய்கிறது. இதனால்தான் இந்த அரசை கலைக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம். சட்டப் பேரவையில் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் நடத்தப்படும் விதத்தை பாா்க்கும்போது, ஜனநாயகம் ஆபத்தில் இருப்பது தெரிய வருகிறது.

கடந்த இரண்டரை ஆண்டுகளாக எதிா்க்கட்சி தாக்கல் செய்த எந்தவொரு தீா்மானமும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. இருக்கையிலிருந்து பேச எழுந்ததுமே பாஜக எம்எல்ஏக்கள் அவையிலிருந்து வெளியேற்றப்படுகின்றனா் என்றாா் ராம்வீா் சிங் பிதூரி.

முன்னதாக ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்களிடம் பாஜக பேரம் பேசி ஆட்சியைக் கவிழ்க்க முயற்சித்ததாகவும், அதனை வெற்றிகரமாக முறியடித்ததாகவும் ஆம் ஆத்மி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

SCROLL FOR NEXT