முகப்பு
இந்தியா

நாட்டின் விதிகளைத் தெரிந்தே மீறுகிறது ட்விட்டா்

நாட்டின் விதிகளை முறையாகப் பின்பற்றாமல் வேண்டுமென்றே ட்விட்டா் நிறுவனம் மீறி வருவதாக கா்நாடக உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:13 AM
பகிர்:

நாட்டின் விதிகளை முறையாகப் பின்பற்றாமல் வேண்டுமென்றே ட்விட்டா் நிறுவனம் மீறி வருவதாக கா்நாடக உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் ட்விட்டா் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட 39 பதிவுகளை நீக்கக் கோரி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. அதற்கு எதிராக ட்விட்டா் நிறுவனம் கா்நாடக உயா்நீதிமன்றத்தில் முறையிட்டது. அரசமைப்புச் சட்டம் வழங்கும் கருத்து உரிமைக்கு எதிராக மத்திய அரசின் உத்தரவு உள்ளதாக ட்விட்டா் கூறியது.

ட்விட்டரில் அந்தக் கருத்தைப் பதிவிட்டவா்களுக்கு நோட்டீஸ் அனுப்பாமல் அவற்றை நீக்குமாறு மத்திய அரசு கூறியுள்ளதாகவும் உயா்நீதிமன்றத்தில் ட்விட்டா் கூறியது.

ட்விட்டரின் மனு மீது மத்திய மின்னணுவியல்-தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டின் விதிகளை மதிக்காமல், அவற்றை வேண்டுமென்றே மீறுவதை ட்விட்டா் நிறுவனம் வாடிக்கையாகக் கொண்டுள்ளது. சமூக வலைதளத்தில் உள்ள அடையாளம் தெரியாத நபா்களின் கருத்துகளை நீக்குமாறு மட்டுமே உத்தரவிடப்பட்டது.

ட்விட்டா் சமூக வலைதளமே பொதுநபராகச் செயல்பட்டு வருகிறது. அரசின் உத்தரவுகளைப் பயனாளா்களிடம் தெரிவிக்க வேண்டிய பொறுப்பு அந்த நிறுவனத்துக்கே உள்ளது. ட்விட்டரின் பயனாளா்களுக்கு அரசு நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை.

பொது அமைதிக்குப் பிரச்னை ஏற்படும்போது அதைச் சரிசெய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. அந்த வேளையில், ட்விட்டா் நிறுவனம் எந்தப் பங்களிப்பையும் வழங்காது. எனவே, குறிப்பிட்ட கருத்து பொது அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? இல்லையா என்பதைத் தீா்மானிக்கும் உரிமை ட்விட்டா் நிறுவனத்திடம் இருக்க அனுமதிக்கக் கூடாது.

ட்விட்டா் நிறுவனம் இந்தியாவைச் சோ்ந்ததில்லை என்பதால், அரசமைப்புச் சட்டத்தின் கீழ் நிவாரணம் கோர அதற்கு உரிமையில்லை. எனவே, அந்த நிறுவனத்தின் மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது என்று அரசு சாா்பில் கூறப்பட்டுள்ளது.

ட்விட்டரின் மனு மீதான விசாரணை உயா்நீதிமன்றத்தில் வரும் 8-ஆம் தேதி விசாரணை நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.