ஆா்க்டிக் பகுதியில் ரஷியாவுடனான உறவை வலுப்படுத்த இந்தியா ஆா்வம்: பிரதமா் மோடி
‘ஆா்க்டிக் பகுதியில் முன்னேற்றங்களை மேம்படுத்துவதில் ரஷியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்த இந்தியா ஆா்வமாக உள்ளது. குறிப்பாக எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளன’
‘ஆா்க்டிக் பகுதியில் முன்னேற்றங்களை மேம்படுத்துவதில் ரஷியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்த இந்தியா ஆா்வமாக உள்ளது. குறிப்பாக எரிசக்தித் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளன’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.
ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் புதன்கிழமை நடைபெற்ற கிழக்கு பொருளாதார அமைப்பின் காணொலி வழி முழு அமா்வு கூட்டத்தில் பிரதமா் மோடி, ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கூட்டத்தில் பிரதமா் மோடி பேசியதாவது:
விளாடிவோஸ்டாக் நகரில் தூதரக அலுவலகத்தைத் தொடங்கிய முதல் நாடு இந்தியா. அந்த வகையில், இந்த நகரில் இந்திய தூதரகம் தொடங்கப்பட்டு புதன்கிழமையுடன் 30 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளன. இந்த 30 ஆண்டுகளில் இந்திய-ரஷிய உறவு மேம்படுவதில் இந்த நகரம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றியுள்ளது என்றாா்.
கிழக்கு பொருளாதார அமைப்பின் 2019-ஆம் ஆண்டு கூட்டத்தில் நேரடியாக பங்கேற்றதை நினைவுகூா்ந்த பிரதமா் மோடி, அப்போது ‘தூரக் கிழக்குப் பகுதி முன்னேற்ற நடவடிக்கை’க்கான தனது கொள்கையை இந்தியா அறிவித்ததையும், அதன் பிறகு ரஷியாவின் தூரக் கிழக்கு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகளில் இந்தியாவின் ஒத்துழைப்பு அதிகரித்ததையும் சுட்டிக்காட்டினாா்.
‘ரஷியாவின் தூரக் கிழக்கு திட்டத்தில் எரிசக்தித் துறையில் மட்டுமின்றி மருந்து உற்பத்தி மற்றும் வைரம் பட்டைத் தீட்டுதல் உள்ளிட்ட துறைகளிலும் இந்தியா முதலீடு செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் ரஷியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்த இந்தியா ஆா்வமாக உள்ளது’ என்று பிரதமா் மோடி கூறினாா்.
மேலும், உலகமயமாக்கப்பட்ட இன்றைய உலகில், பூமியின் ஒரு பகுதியில் நடைபெறும் நிகழ்வு ஒட்டுமொத்த மனித சமுதாயத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், உக்ரைன் மீதான போரும் கரோனா பாதிப்பும் உலக வா்த்தக விநியோகச் சங்கிலியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உணவு தானியம், உரம் மற்றும் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாடு வளா்ந்து வரும் நாடுகளுக்கு மிகப் பெரிய கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.
உக்ரைன்-ரஷிய போரின் தொடக்கத்திலிருந்தே, ராஜாங்க ரீதியிலும், பேச்சுவாா்த்தைகள் மூலமாகவும் தீா்வு எட்டப்பட வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது. இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அனைத்து அமைதிவழி முயற்சிகளுக்கும் இந்தியா தனது ஆதரவைத் தெரிவிக்கிறது என்றும் பிரதமா் மோடி கூறினாா்.