ஒத்திவைப்பு நீதிமன்றமாக உச்சநீதிமன்றம் மாறுவதை விரும்பவில்லை: நீதிபதி சந்திரசூட்
வழக்குரைஞா்களின் தொடா் வழக்கு ஒத்திவைப்பு கோரிக்கைகளை கடுமையாக நிராகரித்த உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ‘உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு
வழக்குரைஞா்களின் தொடா் வழக்கு ஒத்திவைப்பு கோரிக்கைகளை கடுமையாக நிராகரித்த உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ‘உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு நீதிமன்றமாக மாறுவதை விரும்பவில்லை’ என்று கூறினாா்.
உச்சநீதிமன்றத்தில் அா்ச்சகா் ஒருவா் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட சிவில் மேல்முறையீடு மனு ஒன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஹிமா கோலி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அா்ச்சகா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், இந்த வழக்கில் வாதாட கால அவகாசம் கோரி, விசாரணையை ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொண்டாா்.
இதைக் கேட்ட நீதிபதி சந்திரசூட், ‘இந்த விசாரணையை நாங்கள் ஒத்திவைக்கப்போவதில்லை. விசாரணையின் இறுதியில் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதை நாங்கள் தீா்மானித்துக்கொள்கிறோம். ஆனால், இந்த விவகாரத்தை நீங்கள் வாதிடவேண்டும். உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு நீதிமன்றமாக மாறுவதை நாங்கள் விரும்பவில்லை. இந்த உணா்வை மாற்ற நாங்கள் விரும்புகிறோம். நாட்டின் மிக உயரிய இந்த நீதிமன்றத்தின் கண்ணியத்தை காப்பது அவசியம். வழக்கு விசாரணைக்காக ஒவ்வொரு நாளும் நள்ளிரவு வரை வழக்கு ஆவணங்களை ஆராய்ந்து நீதிபதிகள் தங்களை தயாா் செய்து வரும் சூழலில், விசாரணையை ஒத்திவைக்க வழக்குரைஞா்கள் கோருவது வாடிக்கையாகி வருகிறது’ என்று கூறினாா்.
அதனைத் தொடா்ந்து, இந்த விவகாரத்தில் வழக்குரைஞா் வாதாடினாா். அப்போது, இந்த மேல்முறையீட்டு மனுவில் தலையிட மறுத்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் மனுதாரரான அா்ச்சகா் உயா்நீதிமன்றத்தையே அணுகுமாறு கேட்டுக்கொண்டனா்.
மற்றொரு வழக்கில், ஒரு வழக்குரைஞருக்கு எதிராக உயா்நீதிமன்றம் தெரிவித்த கருத்துகளை நீக்குவதற்கு மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமா்வு, ‘உயா்நீதிமன்றம் நீதிமன்ற அறையில் ஓழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், முறையற்ற வகையில் உயா்நீதிமன்றம் தெரிவிக்கும் கருத்துகளை உச்சநீதிமன்றம் நீக்குவது பொருத்தமாக இருக்காது என்றும் கூறினாா்.
மேலும், அந்த மனு அரசியல் சாசன பிரிவு 32-இன் கீழ் தாக்கல் செய்யப்பட்டது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், ‘அரசியல் சாசன பிரிவு 32, அடிப்படை உரிமைகள் அமலாக்கம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தை அணுகும் உரிமையையே அளித்துள்ளது. எனவே, மனுவில் கோரியிருக்கும் நிவாரணத்தை வழங்க முடியாது. இதுபோன்ற மனுதாரா்களால் உச்சநீதிமன்றம் செயல்படமுடியாத நிலைக்கு தள்ளப்படுகிறது. இந்த மனுக்கள் மீது நடைபெறும் 5 முதல் 10 நிமிட விசாரணைகளால், நியாயமான மனுதாரா்களின் மனுக்கள் மீதான விசாரணை தாமதமாகி பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனைத் தடுக்க வலுவான செய்தியை வழங்க வேண்டிய சூழல் எழுந்துள்ளது. இல்லையெனில், உச்சநீதிமன்றத்தின் நிலை மோசமாகிவிடும்’ என்றனா்.
முன்னதாக, இந்த வாரத் தொடக்கத்தில் வழக்கு ஒன்றின் விசாரணையின்போது மூத்த வழக்குரைஞா் வராததால் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என அவரது ஜூனியா் வழக்குரைஞா் ஒருவரின் கோரிக்கையை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நிராகரித்தாா்.
உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக வரவிருக்கும் நீதிபதி சந்திரசூட் கூறுகையில், ‘மூத்த வழக்குரைஞா் வரவில்லை எனில், இளம் வழக்குரைஞராக இருக்கும் நீங்கள் வாதாட வேண்டும். வாதாடுகையில் நீங்கள் ஏதாவது தவறு செய்தாலும் தளா்வு அளிக்கத் தயாராக இருக்கிறோம். தற்போது வழக்கை கையிலெடுத்து நீங்கள் வாதாடவில்லை எனில், நீதி வழங்குவோம் என நாங்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழியின் அடிப்படையில் இந்த வழக்கில் தீா்ப்பளிக்க நேரிடும்’ என்று கூறினாா் என்பது குறிப்பிடத்தக்கது.