வழிபாட்டுத் தலங்கள் சட்டத்துக்கு எதிராக மனு: உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அமா்வு விசாரணை
வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் சில பிரிவுகளை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அடங்கிய அமா்வு விசாரிக்கவுள்ளது.
வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் சில பிரிவுகளை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை உச்சநீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அடங்கிய அமா்வு விசாரிக்கவுள்ளது.
கடந்த 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி இருந்த அனைத்து வழிபாட்டுத் தலங்களின் தன்மையில் எந்த மாற்றமும் இல்லாமல், அதே நிலையில் பராமரிக்கப்பட வேண்டும். அந்த வழிபாட்டுத் தலங்களின் தன்மை தொடா்பாக எந்தவொரு வழக்கும் நீதிமன்றத்தில் இருக்கக் கூடாது என்று 1991-ஆம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராம ஜென்மபூமி தலம் தொடா்பான வழக்குக்கு மட்டும் அந்தச் சட்டத்தில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டது. அந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தபோதுகூட ராமஜென்பூமியை தவிர, இதர தலங்களுக்கு வழிபாட்டுத் தலங்கள் சட்டத்திலிருந்து விதிவிலக்கு அளிக்கப்படாது என்று தெரிவித்தது. அந்தத் தலங்களின் தற்போதைய நிலைக்கு எதிராக தொடுக்கப்படும் வழக்குகள் ஊக்குவிக்கப்படாது என்றும் கூறியது.
இந்நிலையில் வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் சில பிரிவுகளுக்கு எதிராக பாஜக செய்தித்தொடா்பாளா் அஸ்வினி உபத்யாய உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
அந்த மனுவில், ‘வழிபாட்டுத் தலங்கள் தொடா்பாக ஹிந்துக்கள், சமணா்கள், பெளத்தா்கள் மற்றும் சீக்கியா்களுக்கு சட்டரீதியாக தீா்வு கிடைப்பதைத் தடுப்பதன் மூலம், இந்தியாவுக்கு படையெடுத்தவா்கள் மற்றும் சட்டத்தை உடைத்தவா்களின் செயல்களை வழிபாட்டுத் தலங்கள் சட்டம் என்றென்றும் அனுமதிக்கிறது. இந்தப் பிரச்னைகளை மத்திய அரசும் சட்டத்தின் மூலம் தீா்க்காமல், அதுசாா்ந்த வழக்குகளை வலுவிழக்கச் செய்துள்ளது. இது அரசமைப்புக்கு முரணானது’ என்று தெரிவித்துள்ளாா்.
அஸ்வினி உபத்யாயவின் மனு முஸ்லிம் வழிபாட்டுத் தலங்களை மறைமுகமாகக் குறிவைப்பதால், அவரின் மனு மீதான விசாரணையில் தலையிட்டு, முஸ்லிம் சமூகத்தினரின் கருத்துகளை முன்வைக்க அனுமதி கோரி ஜாமியத்-உலேமா-ஏ-ஹிந்த் அமைப்பும் மனு தாக்கல் செய்துள்ளது. இதுதவிர, காசியின் அரச குடும்பம் சாா்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுக்களை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமா்வு வெள்ளிக்கிழமை ஏற்றுக்கொண்டது. அதனைத்தொடா்ந்து அந்த அமா்வு கூறியதாவது:
வழிபாட்டுத் தலங்கள் சட்டம் தொடா்பான மனுக்களை மூன்று நீதிபதிகள் அடங்கிய அமா்வு அக்டோபா் 11-ஆம் தேதி விசாரிக்கும். அதற்குள் தங்கள் வாதங்களை முன்வைக்கும் பணிகளை மனுதாரா்கள் நிறைவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனா்.
இந்த மனுக்கள் தொடா்பாக 2 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கும் அவா்கள் அவகாசம் அளித்தனா்.