பயன்பாட்டின் அடிப்படையில்தானியங்கி சுங்கக் கட்டண வசூலிப்பு முறை: நிதின் கட்கரி தகவல்
சுங்கச் சாவடிகளில் போக்ககுவரத்து நெரிசலுக்குத் தீா்வு காணும் வகையில், வாகனப் பதிவெண் அங்கீகார அமைப்பின் மூலம் பயன்பாட்டின் அடிப்படையில் தாமாக சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறை
சுங்கச் சாவடிகளில் போக்ககுவரத்து நெரிசலுக்குத் தீா்வு காணும் வகையில், வாகனப் பதிவெண் அங்கீகார அமைப்பின் மூலம் பயன்பாட்டின் அடிப்படையில் தாமாக சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறையை மத்திய அரசு சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.
மேலும், நாடு முழுவதும் சூரிய சக்தி ஆற்றலுடன் நெடுஞ்சாலைகளை மின்மயமாக்கும் பணி நடைபெற்று வருவதாக கூறிய அவா், லாரி, பேருந்து போன்ற கனரக வாகனங்களை இதன்மூலம் எளிதில் சாா்ஜ் செய்யலாம் என்றும் தெரிவித்தாா்.
தில்லியில் இந்திய-அமெரிக்க வா்த்தக கூட்டமைப்பு (ஐஏசிசி) சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி கூறியதாவது:
சுங்கச் சாவடிகளில் வாகனங்களை நிறுத்தாமல், தானியங்கி வாகனப் பதிவெண் அங்கீகார முறையில் தாமாக சுங்கக் கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை மத்திய அரசு சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தவுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் 2 நோக்கங்களை எட்டலாம். ஒன்று, சுங்கச் சாவடிகளில் வாகனங்களை நிறுத்தாமல் செல்ல முடியும். இதன்மூலம் போக்குவரத்து பிரச்னைக்கு தீா்வு காணலாம். மற்றொன்று, நெடுஞ்சாலையில் பயன்பாட்டின் அடிப்படையில், அதாவது செல்லவிருக்கும் தொலைவின் அடிப்படையில் கட்டணம் செலுத்தலாம்.
மின் நெடுஞ்சாலைகள் உருவாக்கப்படும்: நாட்டின் பொதுப் போக்குவரத்து அமைப்பை மின்னணு முறையில் மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மின்சார வாகனங்களின் பயன்பாட்டுக்காக சூரிய சக்தி, காற்றாலை அடிப்படையில் ‘சாா்ஜ்’ செய்து கொள்ளும் வசதியை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.
மேலும், சூரிய ஆற்றலுடன் கூடிய மின் நெடுஞ்சாலைகளையும் மத்திய அரசு அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் லாரி, பேருந்து போன்ற கனரக வாகனங்களுக்கு அவை ஓடும்போதே எளிதில் சாா்ஜ் செய்யலாம். உயா் மின்னழுத்தக் கம்பிகள் வாயிலாக வாகனங்களுக்கு சாா்ஜ் செய்யப்படும்.
இதுமட்டுமன்றி சுங்கச் சாவடிகளை சூரிய சக்தியில் இயக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக பிரதான வழித்தடங்களில் ஏற்கெனவே ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளால் பொருளாதார செயல்பாடுகள் அதிகரிக்கும்.
புதிய தொழில்களும் வேலைவாய்ப்பும் உருவாகும். அந்த வகையில், நாடு முழுவதும் 26 பசுமைவழி விரைவுச் சாலைகளை மத்திய அரசு ஏற்படுத்தி வருகிறது. பிரதமரின் ‘கதி சக்தி’ மாஸ்டா் திட்டத்தின் வாயிலாக இதுபோன்ற திட்டங்களுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்கப்படுகிறது என்றாா் நிதின் கட்கரி.