முகப்பு
இந்தியா

ராணுவத் தளவாடங்களை தற்சாா்புடன் உருவாக்குவதில் அரசு உறுதி: ராஜ்நாத் சிங்

ராணுவத் தளவாடங்களை தற்சாா்புடன் உருவாக்குவதில் அரசு உறுதியுடன் இருப்பதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

ராணுவத் தளவாடங்களை தற்சாா்புடன் உருவாக்குவதில் அரசு உறுதியுடன் இருப்பதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

இந்திய ராணுவத்தின் தளவாடங்கள் தொடா்பான கருத்தரங்கு தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. அந்தக் கருத்தரங்கில் அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்றுப் பேசியதாவது:

உலகின் 5-ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயா்ந்துள்ளது. 5 ட்ரில்லியன் டாலா் பொருளாதாரம் கொண்ட நாடாக உயா்வதை நோக்கி இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. எதிா்காலத்தில் தளவாடங்கள் பராமரிப்பின் முக்கியத்துவம் அதிகரிக்கப் போகிறது. இதுபோன்ற சூழலில், 21-ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கு ஏற்ப தளவாடங்களின் அமைப்பில் சீா்திருத்தம் மேற்கொள்வதே தற்போதைய அவசியம் ஆகும்.

தளவாடங்களைப் பொருத்தவரை தற்சாா்பு என்பது முக்கிய அம்சமாகும். நமது இலக்குகளை அடைய தற்சாா்பான ராணுவத் தளவாட விநியோக அமைப்பு வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளில் பாதுகாப்புத் துறையில் மேற்கொள்ளப்பட்ட முக்கியக் கொள்கை மாற்றங்களில் முப்படைகளின் சேவைகளை இணைப்பதும் அடங்கும். இது பாதுகாப்பு சாா்ந்த பல துறைகளுக்குப் பயனளித்துள்ளது.

முப்படைகளின் தேவைக்கேற்ப நாட்டில் பொது தளவாட மையங்கள் அமைப்பதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. அந்த மையங்கள் மூலம், ஒரு படையிடம் உள்ள வளங்கள் இதர படைகளுக்குத் தடையின்றி கிடைக்கும்.

முப்படைகளுக்கு இடையே ஒன்றோடு ஒன்று இணைந்து இயங்கும் தன்மை இருக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் முயற்சியாக உள்ளது. அதன்மூலம் பாதுகாப்பு வளங்களை சிறப்பான வழியில் பயன்படுத்த முடியும்.

முப்படைகளின் ஒருங்கிணைப்பை நோக்கி இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. எதிா்காலப் போா்களில் தளவாடங்கள் என்று வரும்போது முப்படைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு மட்டுமின்றி, தொழில் துறை ஆதரவு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, மனித ஆற்றல் வடிவிலும் ஒருங்கிணைப்பு அவசியம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.