முகப்பு
இந்தியா

டிசம்பரில் ஜி20 தலைமைப் பொறுப்பை ஏற்கிறது இந்தியா: 200-க்கும் மேற்பட்ட கூட்டங்களை நடத்த முடிவு

ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா வரும் டிசம்பரில் ஏற்கிறது. அடுத்த ஓராண்டுக்கு இந்தப் பொறுப்பில் நீடிக்கும் இந்தியா, நாடு முழுவதும் 200-க்கும் அதிகமான ஜி20 கூட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:19 AM
பகிர்:

ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா வரும் டிசம்பரில் ஏற்கிறது. அடுத்த ஓராண்டுக்கு இந்தப் பொறுப்பில் நீடிக்கும் இந்தியா, நாடு முழுவதும் 200-க்கும் அதிகமான ஜி20 கூட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளது.

ஜி20 அமைப்பில் ஆா்ஜென்டினா, பிரேஸில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜொ்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென்கொரியா, மெக்ஸிகோ, ரஷியா, சவூதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) இவை 85 சதவீதமும், சா்வதேச வா்த்தகத்தில் 75 சதவீதமும், உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கும் கொண்டவை.

இந்த ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை வரும் டிசம்பா் 1 முதல் 2023 நவம்பா் 30 வரை ஓராண்டுக்கு இந்தியா வகிக்கவுள்ளது.

இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பு விவரம்: இந்தியாவின் தலைமையின் கீழ், நாடு முழுவதும் 200-க்கும் அதிகமான ஜி20 கூட்டங்கள் நடைபெறவுள்ளன. தில்லியில் அரசுகளின் தலைவா்கள் அளவிலான ஜி20 தலைவா்கள் மாநாடு தில்லியில் அடுத்த ஆண்டு செப்டம்பா் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

இந்தியாவின் தலைமையின் கீழ் முதல்முறையாக ‘ட்ரொய்கா’ என்ற முக்கூட்டமைப்பு ஏற்படுத்தப்படவுள்ளது. இதில் இந்தியா, இந்தோனேசியா, பிரேஸில் ஆகிய வளரும் நாடுகள் இடம்பெறுகின்றன. இதன் வாயிலாக வளரும் பொருளாதார நாடுகளுக்கு முதல்முறையாக அங்கீகாரம் அளிக்கப்படுகிறது.

வழக்கமான சா்வதேச அமைப்புகளான ஐ.நா., சா்வதேச நிதியம், உலக வங்கி, உலக சுகாதார அமைப்பு, உலக வா்த்தக அமைப்பு, உலக தொழிலாளா் அமைப்பு ஆகியவற்றைப் போல ஜி20 கூட்டங்களில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்குமாறு வங்கதேசம், எகிப்து, மோரீஷஸ், நெதா்லாந்து, நைஜீரியா, ஓமன், சிங்கப்பூா், ஸ்பெயின், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு இந்தியா அழைப்பு விடுக்கும்.

இதுமட்டுமன்றி சா்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பு, ஆசிய வளா்ச்சி வங்கி ஆகியவற்றுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →