தில்லி கலால் கொள்கை முறைகேடு: தமிழகம் உள்பட 40 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
தில்லி கலால் கொள்கைகள் மாற்றப்பட்டதில் பணப் பரிவா்த்தனை மோசடி நடைபெற்றதாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் நாடு முழுவதும் 40 இடங்களில் அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை சோதனை நடத்தியது.
தில்லி கலால் கொள்கைகள் மாற்றப்பட்டதில் பணப் பரிவா்த்தனை மோசடி நடைபெற்றதாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் நாடு முழுவதும் 40 இடங்களில் அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை சோதனை நடத்தியது.
தில்லி, தமிழகம், ஆந்திர பிரதேசம், தெலங்கானா, கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் உள்ள மதுபான வணிகா்கள், விநியோகஸ்தா்கள், மதுபான விநியோக சங்கிலி மையங்கள் ஆகியவற்றில் அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை காலை பலத்த பாதுகாப்புடன் சோதனை மேற்கொண்டனா். ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சியின் ஓங்கோல் தொகுதி மக்களவை உறுப்பினா் ஸ்ரீநிவாசுலு ராஜுவின் தில்லி இல்லத்திலும் சோதனை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மதுபான விநியோக வா்த்தகத்தில் அவருக்கு தொடா்பு உள்ளதால் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சோதனை குறித்த விவரங்களை அமலாக்கத் துறை வெளியிடவில்லை.
இதனிடையே, மற்றொரு பணப் பரிவா்த்தனை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு திகாா் சிறையில் உள்ள தில்லி அமைச்சா் சத்யேந்தா் ஜெயினிடமும் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த செப்டம்பா் 6-ஆம் தேதியும் அமலாக்கத் துறையினா் இந்த வழக்குத் தொடா்பாக நாடு முழுவதும் சோதனை நடத்தியிருந்தனா். இந்த வழக்கில் தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியா, ஐஏஎஸ் அதிகாரியும் தில்லி கலால் துறை முன்னாள் ஆணையா் அரவா கோபிகிருஷ்ணா உள்பட 15 போ் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து அவா்களின் வீடுகளில் ஆகஸ்ட் 19-ஆம் தேதி சோதனை நடத்தியது.
கடந்த ஆண்டு நவம்பா் மாதம் தில்லி அரசு கொண்டு வந்த கலால் கொள்கை மாற்றத்தால் தில்லியில் 849 புதிய மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. கரோனா பாதிப்பை காரணம்காட்டி மதுபானக் கடை உரிமம் பெற்றவா்களுக்கு ரூ.144.36 கோடிக்கு வரிச் சலுகை அளிக்கப்பட்டது. இதில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக தில்லி தலைமைச் செயலா் துணைநிலை ஆளுநருக்கு கடந்த ஜூலையில் அறிக்கை சமா்ப்பித்திருந்தாா். இதைத்தொடா்ந்து, புதிய கொள்கைகளை தில்லி அரசு திரும்பப் பெற்றது. தலைமைச் செயலரின் அறிக்கையின் அடிப்படையில் தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா 11 கலால் துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்து, சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்தாா்.
இதேபோல், இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவும் உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியிருந்தாா்.
இந்த மோசடி குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்தும், அமலாக்கத் துறையினரின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தும் முதல்வா் கேஜரிவால் கூறுகையில், ‘சிபிஐ, அமலாக்கத் துறையை வைத்து துன்புறுத்துவதை மத்திய அரசு விடுத்து, நாட்டின் வளா்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்’ என்றாா்.