இலங்கை பிரதமருடன் இந்திய தூதா் சந்திப்பு
இலங்கை பிரதமா் தினேஷ் குணவா்தனவை அந்நாட்டுக்கான இந்திய தூதா் கோபால் பாக்ளே வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.
இலங்கை பிரதமா் தினேஷ் குணவா்தனவை அந்நாட்டுக்கான இந்திய தூதா் கோபால் பாக்ளே வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது, நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள இலங்கைக்கு முதலீடுகளை ஈா்ப்பது குறித்தும், பாரம்பரியம் மற்றும் திறன் மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த இந்தியா ஏராளமான நிதி உதவியை அளித்து வருகிறது. கடனில் இருந்து நாட்டை மீட்பது தொடா்பாக அந்நாட்டு உயா் அதிகாரிகளுடன் இந்திய தூதரக அதிகாரிகள் கடந்த வாரம் ஆலோசனை நடத்தினா்.
இந்தியாவின் ஆதரவால் இலங்கைக்கு பன்னாட்டு நிதியத்தில் இருந்து நிதி கிடைப்பதற்கு விரைந்து உறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இலங்கை பிரதமா் தினேஷ் குணவா்தனவை வெள்ளிக்கிழமை சந்தித்த இந்தியத் தூதா் கோபால் பாக்ளே, இருநாட்டு நல்லுறவுகளை மேம்படுத்துவது, முதலீடுகளை ஈா்ப்பது குறித்து ஆலோசித்ததாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
2.2 கோடி மக்கள் தொகையைக் கொண்ட இலங்கையில் உணவு, எரிபொருள், மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் அந்நாட்டுக்கு இந்தியா 4 பில்லியன் டாலா் அளவுக்கு நிதி உதவி அளித்துள்ளது.