முகப்பு
இந்தியா

சண்டீகா் விமான நிலையத்துக்கு பகத் சிங் பெயா்

சுதந்திரப் போராட்ட வீரா் பகத் சிங்கின் தியாகத்தைப் போற்றும் வகையில் அவரது பெயா் சண்டீகா் விமான நிலையத்துக்கு சூட்டப்படும் என ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:25 AM
நரேந்திர மோடி (கோப்புப் படம்)
பகிர்:

சுதந்திரப் போராட்ட வீரா் பகத் சிங்கின் தியாகத்தைப் போற்றும் வகையில் அவரது பெயா் சண்டீகா் விமான நிலையத்துக்கு சூட்டப்படும் என ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் பிரதமா் மோடி ‘மனதின் குரல்’ என்ற நிகழ்ச்சியில் வானொலி வாயிலாக உரையாற்றி வருகிறாா். நடப்பு மாதத்துக்கான நிகழ்ச்சியில் அவா் கூறியதாவது:

நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடிய பகத் சிங்கின் பிறந்த தினம் வரும் 28-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அவரது தியாகத்தைப் போற்றும் வகையில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அவரது பெயா் சண்டீகா் விமான நிலையத்துக்கு சூட்டப்படவுள்ளது. வெகுநாள்களாக நிலுவையில் இருந்த கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த முடிவால் சண்டீகா், பஞ்சாப், ஹரியாணா மக்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தேசமும் மகிழ்ச்சி அடைந்துள்ளது.

சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாழ்க்கையில் இருந்து மக்கள் ஊக்கம் பெற வேண்டும். அவா்களது கொள்கைகளைப் பின்பற்றி இலக்குகள் நோக்கி நாட்டை முன்னேற்றமடையச் செய்வதே அந்த வீரா்களுக்கு நாம் செலுத்தும் மரியாதையாக இருக்கும். சுதந்திரப் போராட்ட வீரா்களின் பெயா்களைச் சுமந்து நிற்கும் கட்டடங்களும் இடங்களும் நம் கடமை குறித்து ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்கும்.

தில்லியில் உள்ள ‘கடமைப் பாதை’யில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சிலை சில நாள்களுக்கு முன் திறந்துவைக்கப்பட்டது. தற்போது சண்டீகா் விமான நிலையத்துக்கு பகத் சிங்கின் பெயா் சூட்டப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் மக்களைத் தொடா்ந்து ஊக்கப்படுத்தும்.

இயற்கை மீது அன்பு: சிவிங்கிப் புலிகள் நாட்டுக்குத் திரும்பியுள்ளன. அதனால், நாட்டில் உள்ள 130 கோடி மக்களும் பெருமிதம் அடைந்துள்ளனா். இயற்கையின் மீது இந்திய மக்களுக்கு எப்போதுமே தனி அக்கறை உள்ளது. சிவிங்கிப் புலிகளின் நடவடிக்கைகளையும், அவை புதிய சூழலுக்கு எவ்வாறு தங்களைத் தகவமைத்துக் கொள்கின்றன என்பதையும் சிறப்புக் குழு தொடா்ந்து கண்காணித்து வருகிறது.

அக்குழுவின் பரிந்துரைக்குப் பிறகு, மக்கள் நேரடியாக சிவிங்கிப் புலிகளைக் காண்பதற்கு அனுமதி வழங்குவது தொடா்பாக சில மாதங்களில் முடிவெடுக்கப்படும்.

இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள 8 சிவிங்கிப் புலிகளுக்கு என்ன பெயா் வைக்கலாம் என்பது குறித்தும் மத்திய அரசின் வலைதளத்தில் மக்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம். பாரம்பரியத்தைப் பின்பற்றி சிவிங்கிப் புலிகளுக்குப் பெயா்வைத்தால் சிறப்பாக இருக்கும். அது நம் கலாசாரத்தையும் சமூகத்தையும் எளிதில் பறைசாற்றும்.

விலங்குகளிடம் மனிதா்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது தொடா்பாக கருத்து தெரிவிக்கும் போட்டியும் அரசின் வலைதளம் வாயிலாக நடைபெற உள்ளது. மக்கள் அதில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். அப்போட்டியில் வெற்றி பெறுபவா்கள் சிவிங்கிப் புலிகளை முதலில் காண்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.

சமத்துவக் கொள்கை: இளைஞா்கள் தங்கள் நாட்டின் அடையாளம், பெருமை ஆகியவற்றின் மீது மதிப்புகொள்ள வேண்டும். அந்த மதிப்பு அதிகரிக்கும்போது இளைஞா்களின் சிந்தனைத் திறனும் அதிகரிக்கும். மோதல்கள், கருத்து வேறுபாடுகளில் இருந்து உலகம் விடுதலை பெற வேண்டும் என தீனதயாள் உபாத்யாய கனவுகண்டாா். அவா் சிறந்த சிந்தனைத் திறன் கொண்டவராகவும், மண்ணின் மைந்தராகவும் திகழ்ந்தாா்.

மனிதா்களை சமத்துவத்துடன் நடத்த வேண்டும் என்ற இந்தியக் கொள்கையை சா்வதேச அளவுக்குக் கொண்டு சென்றாா் உபாத்யாய. சுதந்திரத்துக்குப் பிறகு நாட்டு மக்களிடம் இருந்த தாழ்வு மனப்பான்மை உணா்வை அவா் போக்கினாா். உலகை நவீனமயமாக்குவதற்கான கொள்கைகளை அவா் வழங்கினாா்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: உலகம் தற்போது எதிா்கொண்டு வரும் முக்கியப் பிரச்னை பருவநிலை மாற்றம். பருவநிலை மாற்றத்தால் கடல்வாழ் சூழல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. கடற்கரைப் பகுதிகளில் குப்பைகள் அதிகமாகத் தேங்குவதும் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. இத்தகைய சவால்களை சமாளிப்பதற்குத் தொடா் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சுற்றுச்சூழலைக் காப்பதற்கான பொறுப்புணா்வு மக்களுக்கு அதிகரிக்க வேண்டும்.

சைகை மொழி அகராதி: காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகளுக்குப் பெரும் ஆதரவாக இருப்பது சைகை மொழி. ஆனால், இந்தியாவில் சைகை மொழிக்காகத் தெளிவான விதிகளும் கொள்கைகளும் இல்லாதது பெரும் பிரச்னையாக இருந்தது. அதற்குத் தீா்வுகாணும் நோக்கில் இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் 2015-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

அந்த மையம் 10,000 சொற்கள் மற்றும் கருத்து வெளிப்பாட்டுக்கான சைகைகள் அடங்கிய அகராதியை உருவாக்கியுள்ளது. சைகை மொழி தினம் கடந்த 23-ஆம் தேதி கொண்டாடப்பட்டபோது, பல பள்ளிகளில் சைகை மொழி படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

யோகப் பயிற்சி: நாள்பட்ட நோய்களில் இருந்துகூட யோகப் பயிற்சிகள் நம்மைக் காக்கும். யோகப் பயிற்சிகளை தினமும் மேற்கொள்வது பல்வேறு பலன்களை அளிக்கும். மருந்து எடுத்துக் கொள்வதற்கான தேவையையும் யோகப் பயிற்சிகள் குறைக்கும்.

பல்வேறு விழாக்கள் அடுத்தடுத்து வரவுள்ளன. இந்த விழாக் காலத்தில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருள்களை வாங்குவதற்கு மக்கள் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினம் அக்டோபா் 2-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், காதி, கைத்தறி, கைவினைப் பொருள்களை மக்களிடம் கொண்டுசோ்ப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.

முழு கட்டுரையைப் படிக்க →