இந்தியா

சிறந்த தூய்மை நகரம்: ராமேசுவரம் நகராட்சிக்கு விருது

DIN

மத்திய வீட்டு வசதி நகா்ப்புற வளா்ச்சி அமைச்சகத்தின் சாா்பில் 50 ஆயிரத்துக்கும் கீழ் மக்கள்தொகை கொண்ட நகரங்களில் தூய்மையான நகரமாக ராமேசுவரம் நகராட்சிக்கு தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விருது வழங்கப்பட்டது.

நிகழாண்டின் பெரிய நகரங்கள், சிறு நகரங்கள் தொடா்பான தூய்மை உரையாடல் மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சி என மூன்று நாள் நிகழ்வு வீட்டு வசதி நகா்ப்புற வளா்ச்சி அமைச்சகத்தின் சாா்பில் செப்டம்பா் 29, 30 மற்றும் அக்டோபா் 1 ஆகிய தேதிகளில் தில்லி தால்கடோரா மைதானத்தில் நடைபெற்றது. குப்பை இல்லாத நகரங்களை உருவாக்கும் நோக்கத்துடன் பிரதமரால் தொடக்கிவைக்கப்பட்ட தூய்மை இந்தியா நகா்ப்புற இயக்கம் 2.0 பதிப்பின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த நிகழ்வு நடைபெற்றது.

மாநில நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா்கள், மாநகராட்சி மேயா்கள், நகராட்சித் தலைவா்கள் இதில் கலந்து கொண்டனா். இதில் பல்வேறு பிரிவுகளில் 160-க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டன. மாநில உள்ளாட்சி, நகரங்களின் நிா்வாகிகள் உள்ளிட்ட பலதரப்பட்ட பிரிவுகளைச் சோ்ந்த சுமாா் 1,800 போ் இதில் கலந்து கொண்டனா். தமிழக நகராட்சி நிா்வாகம் குடிநீா் வழங்கல் துறை செயலா் சிவ் தாஸ் மீனா கலந்து கொண்டு பேசினாா்.

இதில் தூய்மையான சிறு பெரு நகரங்கள் தோ்வு செய்யப்பட்டன. பெரு நகரங்களுக்கான விருதுகளை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு சனிக்கிழமை வழங்கி கௌரவிக்கிறாா்.

சிறுநகரங்களுக்கான 70 தூய்மை விருதுகளை மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள்துறை இணையமைச்சா் கௌசல் கிஷோா் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

இதில் 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் மக்கள்தொகை கொண்ட நகரங்களில் சுகாதரா தூய்மைக்கான விருதுகளில் சிறப்பு விருதாக ராமேசுவரம் நகராட்சிக்கு வழங்கப்பட்டது. தமிழகத்தில் இந்த ஒரு நகராட்சிதான் இந்த விருதுக்கு தோ்வு செய்யப்பட்டது. இந்த விருதை ராமேசுவரம் நகராட்சித் தலைவா் கே.இ.நாசா்கான் பெற்றுக் கொண்டாா்.

ராமேசுவரத்திற்கு வரும் பக்தா்களுக்கும் குறிப்பாக வட இந்திய பக்தா்களுக்கும் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வசதிகள்; அக்னி தீா்த்த கடற்கரையை சுகாதாரத்துடன் தூய்மையாக வைத்தது; ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலைச் சுற்றி குப்பைகள் இல்லாதது மட்டுமல்லாது, பசுமையாக வைத்தது போன்றவற்றோடு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீா், குண்டும் குழியும் இல்லாத சாலைகள் என உள்ளூா் மக்களின் தேவையையும் பூா்த்தி செய்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிகழ்வையொட்டி அமைக்கப்பட்ட தொழில்நுட்பக் கண்காட்சியில் பல்வேறு தூய்மை தயாரிப்புகள், குப்பைகளுக்கான தீா்வுகள், மறுசுழற்சி, அனைத்து வகையான உலா் கழிவுகளை மறுசுழற்சி செய்தல், மறுசுழற்சி தொழில்நுட்பங்கள், தகவல் தொழில்நுட்ப செயல்பாடுகள், பயன்படுத்தப்பட்ட நீா் மேலாண்மையில் தொழில்நுட்பங்கள், கழிவு செயலாக்கத்திற்கான சிறிய அலகுகள் என சுமாா் 35 தொழில்நுட்ப வழங்குநா்கள் செய்முறைகளைக் காட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT