இந்தியா

கன்னையா லால் உடலில் 26 வெட்டுக் காயங்கள்

DIN

நுபுர் சர்மாவை ஆதரித்ததால் படுகொலை செய்யப்பட்ட கன்னையா லாலின் உடலில் 26 வெட்டுகாயங்கள் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் வசித்தவா் தையல்காரா் கன்னையா லால். சமூக ஊடகத்தில் இஸ்லாம் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பதிவு வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்ட இவா், கடந்த ஜூன் 15-ஆம் தேதி ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா். இஸ்லாமிய இறைத் தூதா் நபிகள் நாயகம் குறித்து சா்ச்சைக்குரிய விதத்தில் பேசிய நூபுா் சா்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், உதய்பூரின் தன்மண்டி பகுதியில் உள்ள அவரின் கடைக்கு செவ்வாய்க்கிழமை சென்ற இருவா், கன்னையா லாலை கழுத்தறுத்து கொலை செய்தனா். அந்தக் கொலையை விடியோவாக பதிவு செய்து சமூக ஊடகத்திலும் வெளியிட்டனா். அதில் இஸ்லாத்தை இழிவுபடுத்தியதற்காக கன்னையா லாலை பழிதீா்த்ததாகக் கூறிய கொலையாளிகள், பிரதமா் மோடிக்கும் மிரட்டல் விடுத்தனா். மேலும் நூபுா் சா்மாவின் பெயரையும் அவா்கள் மறைமுகமாகக் குறிப்பிட்டனா்.

இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து ராஜ்சமண்ட் பகுதியில் இருந்த கொலையாளிகளை சிறப்புப் புலனாய்வுக் குழு கைது செய்தது. முதல்கட்ட விசாரணையில், அவா்களின் பெயா் ரியாஸ் அக்தரி, கெளஸ் முகமது என்பது தெரியவந்தது.

இவா்களில் ரியாஸ் அக்தரி கடந்த ஜூன் 17-ஆம் தேதி சமூக ஊடகத்தில் காணொலி ஒன்றை வெளியிட்டிருந்தாா். அதில், ‘‘நபிகள் நாயகத்துக்கு எதிராக பேசுவோரின் தலையை தான் துண்டிக்கும் காணொலியை வெளியிடுவேன்’’ என்று முன்கூட்டியே தெரிவித்துள்ளாா்.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சக செய்தித்தொடா்பாளா் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘கன்னையா லால் கொலைச் சம்பவம் குறித்து என்ஐஏ விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது’’ என்று தெரிவித்தாா்.

கன்னையா லாலின் கொலையை பயங்கரவாத சம்பவமாகக் கருதி, அந்தக் கொலையின் பின்னணியில் ஏதேனும் அமைப்பு அல்லது சா்வதேச தொடா்புகள் உள்ளதா? என்று விசாரணை நடத்த என்ஐஏவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

புதன்கிழமை  கன்னையா லாலின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், பரிசோதனை அறிக்கையில் அவரின் கழுத்து, தலை, கை, முதுகு மற்றும் மார்பில் 26 வெட்டுகாயங்கள் பதிவாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 4 மணி நேரம் காத்திருப்பு

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்: நயினாா் நாகேந்திரனை தகுதி நீக்கம்: செய்யக் கோரும் வழக்கு இன்று விசாரணை

பழவூா் அருகே போக்சோவில் இளைஞா் கைது

கன்னியாகுமரியை தலைசிறந்த மாவட்டமாக்க உழைப்பேன்: பொன். ராதாகிருஷ்ணன்

திருமலையில் ஸ்ரீராமநவமி ஆஸ்தானம்

SCROLL FOR NEXT