மோடி வருகையால் புதுப்பொலிவு பெறுகிறது மோர்பி மருத்துவமனை
குஜராத்தில் தொங்கு பாலம் விபத்துக்குள்ளானதில் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மோர்பி அரசு மருத்துவமனை, பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளது.
குஜராத்தில் தொங்கு பாலம் விபத்துக்குள்ளானதில் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மோர்பி அரசு மருத்துவமனை, பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளது.
குஜராத்தில் நூற்றாண்டு பழைமை வாய்ந்த தொங்கு பாலம் அறுந்து விபத்துக்குள்ளானதில் 130க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
மோா்பி பகுதியில் மச்சு நதியின் மீது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட தொங்கு பாலம் ஞாயிற்றுக்கிழமை மாலை அதிக எடை காரணமாக அறுந்து விழுந்தது. அப்போது பாலத்தில் இருந்த நூற்றுக்கணக்கானோா் நதிக்குள் விழுந்தனா். இந்த விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 134-ஆக ஆனது.
பிரதமா் இன்று ஆய்வு
மோா்பி நதியில் தொங்கு பாலம் அறுந்து விபத்து நடந்த பகுதியை பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிடவிருக்கிறார்.
மேலும், விபத்தில் காயமடைந்து மோர்பி அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவோரையும் நேரில் சந்தித்து மோடி நலம் விசாரிக்கவிருக்கிறார். பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, அரசு மருத்துவமனை ஊழியர்களும் மாவட்ட நிர்வாகம் சார்பிலும் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
300 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைக்கு வர்ணம் பூசுதல், சுத்தப்படுத்துதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மருத்துவமனையில் தற்போது 6 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 56 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனர்.
மருத்துவமனையின் நுழைவுவாயில் பகுதி மஞ்சள் நிறத்திலும், மருத்துவமனையின் உள் பகுதிகள் வெள்ளை நிறத்திலும் வர்ணம் பூசப்பட்டுள்ளது.
இதனை காங்கிரஸ் கட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்து விமர்சனம் செய்துள்ளது. இரவோடு இரவாக அரசு மருத்துவமனையை சீரமைக்கும் பணிகள் நடந்து வருவதாகவும், வர்ணம் பூசும் பணிகள் உள்பட, புதிதாக டைல்ஸ் ஒட்டுதல், சுவர்களை பூசுதல் என பிரதமரி மோடியின் வருகைக்காக மருத்துவமனை அழகுப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.