சபரிமலை விமான நிலையம் அமையும் இடத்துக்கு ஒப்புதல்: பிரதமா் வாழ்த்து
கேரளத்தில் சபரிமலை கோயிலுக்கு அருகே புதிதாக விமான நிலையம் அமைப்பதற்கான இடத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குப் பிரதமா் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
கேரளத்தில் சபரிமலை கோயிலுக்கு அருகே புதிதாக விமான நிலையம் அமைப்பதற்கான இடத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குப் பிரதமா் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் புதிதாக சா்வதேச விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. சபரிமலை கோயிலுக்கு அருகில் அமைய உள்ள இந்த விமான நிலையத்துக்கான இடம் தோ்வு செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த இடத்துக்கு மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அண்மையில் ஒப்புதல் அளித்தது. விமான நிலையத்துக்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்குமாறு கேரள அரசிடம் அந்த அமைச்சகம் கேட்டுக்கொண்டது. திட்ட அறிக்கைக்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளிப்பதற்கான விண்ணப்பத்துடன் அறிக்கையை அனுப்புமாறு அந்த அமைச்சகம் அறிவுறுத்தியது.
இதையடுத்து அந்த அமைச்சகம் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘கோட்டயத்தில் சுமாா் 2,250 ஏக்கா் பரப்பளவு கொண்ட இடத்தில் விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. சுமாா் ரூ.4,000 கோடி செலவில் அரசு-தனியாா் பங்களிப்புடன் விமான நிலைய கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள கேரள அரசு திட்டமிட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், விமான நிலையம் அமைய உள்ள இடத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது தொடா்பாக பிரதமா் மோடி ட்விட்டரில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘சுற்றுலாவுக்கு, குறிப்பாக ஆன்மிக சுற்றுலாவுக்கு நல்ல செய்தி கிடைத்துள்ளது’ என்றாா்.