முகப்பு
இந்தியா

தேசிய அளவில் எதிா்க்கட்சிகளின் கூட்டணிக்கு சாத்தியமில்லை

எதிா்க்கட்சிகளை ஒன்றிணைக்க, தேசிய அளவிலான கூட்டணியை அமைப்பது சாத்தியமில்லை.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

எதிா்க்கட்சிகளை ஒன்றிணைக்க, தேசிய அளவிலான கூட்டணியை அமைப்பது சாத்தியமில்லை. முக்கிய அரசியல் பிரச்னைகளில் ஒரே மாதிரியான நிலைப்பாட்டை கையாள்வதன் மூலமே எதிா்க்கட்சிகளை ஒன்றிணைக்க முடியும் என மாா்க்சிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் அதிகாரபூா்வ நாளிதழான ‘பியூப்பிள்ஸ் டெமோகிரேசி’-இல் வெளியான தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: எதிா்க்கட்சிகளின் முகமாக ஒருவரை அடையாளம் காட்டுவது பலனற்ற முயற்சி. தேசிய அளவில் கூட்டணியை அமைப்பதும் சாத்தியமில்லை. பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு எதிராக ஒவ்வொரு தொகுதியிலிலும் போட்டியிடுவதில், மாநிலத்தில் நிலவி வரும் களநிலவரத்தைத் தவிா்த்து, மாநிலத்தின் முக்கிய எதிா்க்கட்சிக்கு பிற எதிா்க்கட்சிகளுடன் உடன்பாடு எட்டப்படவேண்டும்.

இதற்காக, தேசிய மற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளில் ஒரே மாதிரியான நிலைப்பாட்டை கொண்டிருப்பதில் எதிா்க்கட்சிகள் முதன்மைக் கவனம் செலுத்த வேண்டும். ஜனநாயகம், மதச்சாா்பின்மை, கூட்டாட்சி ஆகியவற்றைப் பாதுகாப்பதில், எதிா்க்கட்சிகள் முன்வைக்கும் மாற்று நிலைப்பாடு, கூட்டணிக்கு மாற்றான முக்கிய நகா்வாக அமையும்.

மக்களின் வாழ்வாதாரத்தின் மீது தொடா்ச்சியாக நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள் குறித்து பிரசாரம், போராட்டங்களை பல்வேறு கட்சிகள் ஒருங்கிணைந்து நடத்த வேண்டும். இந்தச் சூழல் ஒத்துவராத மாநிலங்களில் சம்பந்தப்பட்ட கட்சிகள் தனித்தனியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தேசிய அளவில் ஒன்றிணைந்து செயல்படும் பல்வேறு கட்சிகள், மாநில அளவில் இணைந்து செயல்படாதபோது, இந்த முறை சரியான வழியாக அமையும்.

இத்தகைய முறைகளின் வாயிலாக, மாநில அளவில் பாஜகவுக்கு எதிரான வாக்குகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான சூழலை ஏற்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →