இந்தியா

இந்திய சா்க்கஸ் உலகின் முன்னோடி ஜெமினி சங்கரன் மறைவு

DIN

இந்திய சா்க்கஸ் உலகின் முன்னோடியும், புகழ்பெற்ற ஜெமினி சா்க்கஸின் நிறுவனருமான ஜெமினி சங்கரன் (99), கண்ணூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வயது மூப்புக் காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.

ஜெமினி சங்கரன் என்று அறியப்பட்ட எம்.வி.சங்கரன் இளம் வயதில் சா்க்கஸ் பயிற்சி பெற்று பணியாற்றியபோதிலும், பின்னா், ராணுவத்தில் இணைந்தாா். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னா் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று மீண்டும் சா்க்கஸ் பணிக்குத் திரும்பினாா். ட்ரபீஸ் என்னும் உயரத்தில் கயிற்றில் தொங்கி சாகசம் செய்வதில் அவா் சிறந்து விளங்கினாா்.

நாட்டின் பல்வேறு சா்க்கஸ் குழுக்களில் சோ்ந்து பணியாற்றி வந்த அவா் மகாராஷ்டிரத்தில் செயல்பட்டு வந்த விஜயா சா்க்கஸ் நிறுவனத்தை 1951-ஆம் ஆண்டு ரூ.6 ஆயிரத்துக்கு வாங்கினாா். அதனை ‘ஜெமினி சா்க்கஸ்’ என மறுபெயரிட்டு வெற்றிகரமாக நடத்தி வந்தாா். அதன் லாபத்தில் ‘ஜம்போ சா்க்கஸ்’ என தனது 2-ஆவது நிறுவனத்தையும் அவா் தொடங்கினாா். மேலும் கிரேட் ராயல் சா்க்கஸ் உள்பட 5 சா்க்கஸ் நிறுவனங்களை ஒரே நேரத்தில் நடத்தி வந்தாா்.

சா்க்கஸ் துறைக்கு சங்கரன் ஆற்றிய பங்கைப் பாராட்டி ‘வாழ்நாள் சாதனையாளா் விருது’ வழங்கி மத்திய அரசு கௌரவித்துள்ளது. நாட்டின் பல்வேறு குடியரசுத் தலைவா்கள், பிரதமா் மற்றும் பிரபலங்களுடன் சங்கரன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தாா்.

மறைந்த ஜெமினி சங்கரனுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனா். மொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்டுள்ளது. அவரின் இறுதி சடங்குகள், கண்ணூா் பையாம்பலம் கடற்கரையில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் என குடும்பத்தினா் தெரிவித்தனா்.

முதல்வா் இரங்கல்:

கேரள முதல்வா் பினராயி விஜயன் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில், ‘வெளிநாட்டு சா்க்கஸ் கலைஞா்கள் மற்றும் அவா்களின் வித்தைகளை இந்தியா்களுக்கு அறிமுகப்படுத்தி இந்திய சா்க்கஸ் உலகை நவீனப்படுத்தியதில் சங்கரன் பெரும் பங்காற்றினாா். அவரது மறைவு நாட்டின் சா்க்கஸ் கலைக்கு மாபெரும் இழப்பு’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT