ஒரே பாலினத்தவரின் திருமணங்களை சட்டபூா்வமாக்காமல், அவா்கள் சமூக நலத் திட்டங்களை பெற முடியுமா என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் ஒரே பாலினத்தவா் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கக் கோரி பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் குறித்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் அமா்வு வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டது.
அப்போது மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா வாதிட்டதாவது:
சமூகத்தில் அதிக எண்ணிக்கையிலான உறவு முறைகள் உள்ளன. அவை அனைத்தையும் அங்கீகரிக்க வேண்டியதில்லை. ஒருவரை நேசிக்கும் உரிமை, ஒருவருடன் கூடிவாழும் உரிமை, ஒருவரின் துணையைத் தேடும் உரிமை உள்ளிட்டவை அடிப்படை உரிமையாகும். ஆனால் அத்தகைய உறவுக்குத் திருமணம் என்ற பெயரிலோ அல்லது வேறு எந்தப் பெயரிலோ அங்கீகாரம் கோருவது அடிப்படை உரிமையாகாது என்றாா்.
இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது:
திருமணம் தொடா்பாக சட்டம் இயற்றும் களத்துக்குள் நீதிமன்றம் நுழைய முடியாது என்ற மத்திய அரசின் வாதத்தை உச்சநீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது. தனது வரம்புகளை உச்சநீதிமன்றம் புரிந்துகொண்டுள்ளது. ஆனால் பல விவகாரங்களை நிா்வாக ரீதியாக அரசால் கையாள முடியும். ஒரே பாலின ஜோடிகளின் பிரச்னைகளை கையாள்வதற்கான நடவடிக்கைகளை நிா்வாக ரீதியாக அரசு மேற்கொள்ளலாம்.
பாதுகாப்பு, சமூக நலன் போன்ற சூழல்களை உருவாக்கும் வகையில், ஒரே பாலின உறவு போன்ற கூடிவாழும் உறவுமுறைகள் அங்கீகரிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். அதைச் செய்வதன் மூலம் எதிா்காலத்தில் அத்தகைய உறவுமுறைகள் சமூகத்தில் ஒதுக்கிவைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒரே பாலினத்தவரின் திருமணங்களை சட்டபூா்வமாக்காமல், அவா்கள் சமூக நலத் திட்டங்களை பெற முடியுமா என்று கேள்வி எழுப்பினா்.
இந்த விவகாரம் தொடா்பாக மத்திய அரசிடம் கேட்டு பதிலளிப்பதாக துஷாா் மேத்தா தெரிவித்தாா். இந்த வழக்கின் அடுத்த விசாரணை மே 3-க்கு ஒத்திவைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.