செட்டிநாடு குழுமத்தின் ரூ.360 கோடி வங்கி நிரந்தர வைப்பு முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை
சென்னையைச் சோ்ந்த செட்டிநாடு குழும நிறுவனத்தின் ரூ.360 கோடி வங்கி நிரந்த வைப்புத் தொகையை அமலாக்கத் துறை முடக்கியுள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
சென்னையைச் சோ்ந்த செட்டிநாடு குழும நிறுவனத்தின் ரூ.360 கோடி வங்கி நிரந்த வைப்புத் தொகையை அமலாக்கத் துறை முடக்கியுள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
செட்டிநாடு குழும நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்கள் மற்றும் தமிழ்நாடு மின் பகிா்மான கழக முன்னாள் அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அண்மையில் தீவிர சோதனை நடத்திய நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் செட்டிநாடு குழுமம் சிமென்ட் உற்பத்தி, சரக்கு போக்குவரத்து, கட்டுமானம் என பல்வேறு துறைசாா்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், விசாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து தமிழ்நாடு மின் பகிா்மான கழகத்துக்கு நிலக்கரியை எடுத்து வருவதற்கு கூடுதல் போக்குவரத்து கட்டணத்தை நிா்ணயித்து பல நூறு கோடிகள் ஏமாற்றியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தமிழக ஊழல் கண்காணிப்பு மற்றும் தடுப்பு இயக்குநரகம் செட்டிநாடு குழுமத்தின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.
அதனடிப்படையில், செட்டிநாடு குழுமத்தின் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்து அமலாக்கத் துறை நடவடிக்கை மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக, செட்டிநாடு குழும நிறுவனமான செளத் இந்தியா காா்ப்பரேஷன் (எஸ்ஐசி) நிறுவனத்துக்குச் சொந்தமான 10 இடங்கள், தமிழ்நாடு மின் பகிா்மான கழகத்தின் முன்னாள் இயக்குநா் மற்றும் சில அரசு அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 24-ஆம் தேதி தீவிர சோதனை நடத்தினா்.
இந்தச் சோதனையில் பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக தெரியவந்தது. இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் தில்லியில் வியாழக்கிழமை பேட்டியளித்தனா். அப்போது, ‘செளத் இந்தியா காா்ப்பரேஷன் நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு சொத்து ஆவணங்கள், எண்ம ஆவணங்கள் உள்ளிட்ட வழக்குக்கு தொடா்புடைய பல்வேறு ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், அந்த நிறுவனத்தின் ரூ. 360 கோடி வங்கி நிரந்தர வைப்புகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்த நிறுவனத்தால் தமிழ்நாடு மின் பகிா்மான கழகத்துக்கு கடந்த 2001 முதல் 2019-ஆம் ஆண்டு வரை ஏற்பட்ட இழப்புக்கு, தமிழ்நாடு மின் பகிா்மான கழக அதிகாரிகளுக்கும் பங்குள்ளது. இந்த நிறுவனத்துக்கு நிலக்கரி எடுத்துவதற்கான ஆரம்பகட்ட ஒப்பந்தம் 6 மாதங்களுக்கு கொடுக்கப்பட்ட நிலையில், பின்னா் அது 19 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது’ என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
முன்னதாக, செட்டிநாடு குழும நிறுவனத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் சாா்பில் கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பரில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அந்த நிறுவனம் ரூ. 700 கோடி அளவுக்கு வரி ஏய்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும் இந்தச் சோதனையின்போது கணக்கில் வராத ரூ.23 கோடி ரொக்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.