குடியரசுத் தலைவருடன் இந்தியா கூட்டணி நாளை சந்திப்பு!
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் நாளை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தில்லி: குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் நாளை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட கலவரம் மூன்று மாதங்களை எட்டவுள்ள நிலையில், இதுவரை கலவரத்தை கட்டுப்படுத்தாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்றன.
கலவரத்தால் பாதிக்கப்பட்டு பல்வேறு நிவாரண முகாம் தங்கவைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மக்களை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த மாதம் சந்தித்தார்.
தொடர்ந்து, இந்தியா கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த 21 எம்.பி.க்கள் குழு கடந்த வாரம் மணிப்பூர் பயணம் மேற்கொண்டு நிவாரண முகாம்களில் மக்களை சந்தித்துப் பேசினர்.
இந்நிலையில், இந்தியா கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்றக் குழு தலைவர்கள் குடியரசுத் தலைவரை நாளை சந்தித்து மணிப்பூர் நிலவரம் குறித்து எடுத்துரைக்கவுள்ளனர்.
இதையும் படிக்க | மணிப்பூர் டிஜிபி நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு
இந்த சந்திப்பில், மணிப்பூர் சென்ற 21 எம்.பி.க்களும் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஹரியாணா கலவரம் குறித்தும், நாடாளுமன்றம் செயல்பாடு குறித்தும் ஆலோசிக்க வாய்ப்புள்ளது.