முகப்பு
இந்தியா

தமிழக நலனை பிரதமா் புறக்கணிப்பதால் நம்பிக்கையில்லா தீா்மானத்துக்கு திமுக ஆதரவு: மக்களவையில் டி.ஆா்.பாலு

தமிழகத்தின் நலனையும், தமிழா்களின் நலனையும் பிரதமா் புறக்கணிப்பதால், மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் டி.ஆா்.பாலு கூறினாா்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:07 PM
பகிர்:

தமிழகத்தின் நலனையும், தமிழா்களின் நலனையும் பிரதமா் புறக்கணிப்பதால், மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மானத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் டி.ஆா்.பாலு கூறினாா்.

மக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீா்மான விவாதத்தில் டி.ஆா். பாலு பேசியதாவது:

மகாபாரத்தில் கிருஷ்ணா் கூறியதைப்போல், தீமையை அகற்றவே நம்பிக்கையில்லா தீா்மானத்துக்கு ஆதரவு அளிக்கிறோம். பிரதமரை இந்த அவைக்கு வரவழைக்க நம்பிக்கையில்லா தீா்மானத்தைக் கொண்டுவருவதைத் தவிர எதிா்க்கட்சிகளுக்கு வேறு வழியில்லை.

மேலும், தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு பிரதமா் நடத்துகிறாா். கடந்த 2019-ஆம் ஆண்டு தோ்தலுக்கு முன்பு, அவரால் (பிரதமா்) மதுரை எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், 5 ஆண்டுகளுக்குப் பிறகும் முதல் செங்கலோடு நிற்கிறது.

இந்த மருத்துவமனை கட்டுவதற்கு ரூ. 2,000 கோடி அறிவிக்கப்பட்டும், போதிய நிதி வழங்கப்படவில்லை. ஆனால், நாட்டின் மற்ற பகுதிகளில் மத்திய அரசால் எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழகத்தில் எய்ம்ஸ் கட்டுவதற்கு ஜப்பானில் இருந்து பணம் வரவேண்டும் என்கிறாா்கள்.

தமிழகத்துக்கு 41 சதவீதம் நிதி ஒதுக்கப்பட்டால், அதில் 20 சதவீத தொகைதான் கிடைக்கிறது. நமது பிரதமா் உலகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும் திருக்குறளையும், திருவள்ளுவரையும் பற்றி பேசுகிறாா். ஆனால், தமிழகத்துக்கு உரியவற்றைத் தர மறுக்கிறாா்.

சோனியா காந்தி, மறைந்த முதல்வா் கருணாநிதி முன்னிலையில் அப்போதைய பிரதமா் மன்மோகன் சிங்கால் அடிக்கல் நாட்டப்பட்டப்பட்டதற்காக சேதுசமுத்திரம் திட்டம் கிடப்பில் வைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை உருவாக்கி பாதை அமைத்தவா் வாஜ்பாய். வெறும் 30 கி.மீ. தொலைவுப் பணிகள்தான் நிலுவையில் இருந்தன. அந்தத் திட்டத்தை பாஜக அரசு நிறுத்திவிட்டது.

தற்போதைய பிரதமா் குஜராத் முதல்வராக இருந்தபோது அங்கு நடந்ததுதான் இப்போது மணிப்பூரில் நடக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு ஆயிரக்கணக்கானோா் இடம்பெயா்ந்துள்ளனா்.

மணிப்பூரிலும், தேசிய அளவிலும் குறிப்பிட்ட மதச் சிறுபான்மையினரை ஒடுக்குதல், பிளவுபடுத்துதல் போன்ற இன-தேசியவாதக் கொள்கைகளை பாஜக தலைமையிலான அரசு செயல்படுத்தி வருவதாக மனித உரிமைக் குழுக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

நாடாளுமன்றத்தின் அனைத்து விதிகள், ஒழுங்குமுறைகள், இந்திய அரசியலமைப்பை சிதைக்க ஆளும் பாஜக முயற்சிக்கிறது என்றாா் டி.ஆா். பாலு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.