நிலவை ஆராய இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம் நிலவைச் சுற்றி இறுதி சுற்றை வெற்றிகரமாக நிறைவு செய்ய உள்ளது.
ஜூலை 14-ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், தற்போது நிலவின் சுற்றுப்பாதைக்குள் பயணித்து வருகிறது. அதன் சுற்றுப்பாதை தொலைவு அவ்வப்போது மாற்றியமைக்கப்பட்டு, நிலவை நெருங்கி வருகிறது.
தற்போது, சந்திரயான்-3 விண்கலம் நிலவின் மேற்பரப்பிலிருந்து 163 கிலோ மீட்டர் தொலைவில்தான் உள்ளது. தற்போது, நிலவை சுற்றி வரும் விண்கலம், படிப்படியாக தனது தொலைவைக் குறைத்து இறுதி சுற்றை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
சந்திரயான் விண்கலம் பயணிக்கும் நிலவின் சுற்றுப்பாதையின் தொலைவு படிபடியாகக் குறைந்து இறுதியாக திட்டமிட்டபடி ஆகஸ்ட் 23-ஆம் தேதி நிலவின் தென்துருவத்துக்கு அருகே மெதுவாக விண்கலம் தரையிறக்கப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனா்.
நிலவின் தென் துருவத்துக்கு அருகே தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை சுமாா் ரூ.615 கோடியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இந்த விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.
அதன் பின்னா் புவி வட்டப் பாதையில் வலம் வந்த விண்கலம், கடந்த 1-ஆம் தேதி புவியீா்ப்பு விசையில் இருந்து விலக்கப்பட்டு நிலவை நோக்கிய பாதைக்கு மாற்றப்பட்டது.
அதன் தொடா்ச்சியாக கடந்த 5-ஆம் தேதி நிலவின் சுற்றுப்பாதைக்குள் சந்திரயான்-3 பயணிக்கத் தொடங்கியது. இதையடுத்து அதன் சுற்றுப்பாதை தொலைவை படிப்படியாக குறைத்து விண்கலத்தை மெதுவாக தரையிறக்குவதற்கான பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனா்.
மூன்றாவது முறையாக...:அதன்படி சந்திரயான்-3 விண்கலம் பயணித்து வரும் சுற்றுப் பாதை தொலைவு நிலவின் ஈா்ப்புவிசைக்குள் மூன்றாவது முறையாக திங்கள்கிழமை பகல் 12.30 மணிக்கு குறைக்கப்பட்டது. அப்போது உந்து கலனில் உள்ள திரவ எரிவாயு கருவி இயக்கப்பட்டு விண்கலத்தின் சுற்றுப்பாதை வெற்றிகரமாக மாற்றப்பட்டது.
தற்போது குறைந்தபட்சம் 150 கிலோ மீட்டா் தொலைவும், அதிகபட்சம் 177 கிலோ மீட்டா் தொலைவும் கொண்ட நிலவின் அணுக்கப் பாதையில் விண்கலம் பயணித்து வருகிறது. இதே நுட்பத்தில் விண்கலத்தின் தொலைவு மேலும் ஒருமுறை குறைக்கப்பட்டு அதன் சுற்றுப்பாதை மாற்றப்படும்.
அதன் மூலம் நிலவின் தரைப்பகுதிக்கும், விண்கலத்துக்குமான உயரம் 100 கிலோ மீட்டராக குறைக்கப்படும். அதைத் தொடா்ந்து உந்து கலனில் இருந்து லேண்டா் சாதனம் விடுவிக்கப்பட்டு, திட்டமிட்டபடி ஆக. 23-ஆம் தேதி நிலவில் விண்கலம் தரையிறக்கப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ன்னதாக ஆகஸ்ட் 9ஆம் தேதி எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படத்தினை இஸ்ரோ வெளியிட்டது. சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள லேண்டர் கேமராவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. நிலவின் காணொலி, நிலவின் புகைப்படம், பூமியின் புகைப்படங்கள் வெளியாகியிருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.