தந்தை ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், லடாக் யூனியன் பிரதேசத்தின் லே முதல் பாங்காங் ஏரி வரை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இருசக்கர வாகனத்தை இயக்கியுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி லடாக்கிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு லடாக் யூனியன் பிரதேசம் உருவாக்கப்பட்டது. அதன்பின், முதல் முறையாக ராகுல் காந்தி லடாக்கிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அடுத்த வாரம் அவர் கார்கில் செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது. இரண்டு நாள் பயணமாக லடாக்கின் லேவிற்கு நேற்று முன் தினம் (ஆகஸ்ட் 17) ராகுல் காந்தி சென்றடைந்தார். அதன்பின் அவர் தனது இந்த சுற்றுப்பயணத்தை பாங்காங் ஏரி, நுப்ரா பள்ளத்தாக்கு மற்றும் கார்கில் பகுதிகளுக்கு செல்வதற்காக மேலும் நான்கு நாள்களுக்கு நீட்டித்துள்ளார்.
இதையும் படிக்க: லடாக்கில் ராணுவ வாகனம் விபத்து: 9 வீரர்கள் பலி
இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: லடாக்கின் லேவில் இருந்து 130 கிலோமீட்டர் தூரம் இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி பாங்காங் ஏரியை சென்றடைந்து அங்கு இரவு தங்க உள்ளார். அங்கு அவரது தந்தை ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
லே முதல் பாங்காங் ஏரி வரை இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, வழியில் அவர் எடுத்த புகைப்படங்களை அவரது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டுள்ளார். பாங்காங் ஏரி உலகத்தில் உள்ள மிகவும் அழகான இடங்களில் ஒன்று என எனது தந்தை எப்போதும் கூறுவார் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: பென் ஸ்டோக்ஸ் ஒரு சுயநலவாதி: ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்!
பாங்காங் ஏரியிலிருந்து நாளை (ஆகஸ்ட் 20) நுப்ரா பள்ளத்தாக்குக்கு இருசக்கர வாகனத்தில் செல்லும் ராகுல் காந்தி நாளை இரவு அங்கு தங்குகிறார். அவர் வழியில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
ராகுல் காந்தியின் இந்த இருசக்கர வாகனப் பயணம் அரசியல் சார்ந்தது இல்லையென்றாலும், அவர் செல்லும் இடங்களிலெல்லாம் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.