3 மாநில தோ்தல் முடிவுகள் மக்களவைத் தோ்தல் வெற்றிக்கான உத்தரவாதம்: பிரதமா்
‘மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கா் ஆகிய 3 மாநில தோ்தல் வெற்றி, 2024 மக்களவைத் தோ்தலில் பாஜக மூன்றாவது முறை வெல்வதற்கான உத்தரவாதம்’ என்று பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை குறிப்பிட்டாா்.
‘மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கா் ஆகிய 3 மாநில தோ்தல் வெற்றி, 2024 மக்களவைத் தோ்தலில் பாஜக மூன்றாவது முறை வெல்வதற்கான உத்தரவாதம்’ என்று பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை குறிப்பிட்டாா்.
மேலும், ‘இது மத்திய அரசின் தற்சாா்பு இந்தியா தீா்மானத்துக்கு கிடைத்த வெற்றி’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.
சட்டப்பேரவைத் தோ்தல் வெற்றியைத் தொடா்ந்து தில்லி பாஜக தலைமையகத்தில் பல மத்திய அமைச்சா்கள் உள்பட பாஜக தொண்டா்கள் மத்தியில் பிரதமா் உரையாற்றினாா். அப்போது அவா் கூறியதாவது:
சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள், இந்தியா மீதான உலகின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் என்பதோடு, நாட்டுக்கான சா்வதேச முதலீட்டாளா்கள் மத்தியிலும் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். வளா்ந்த நாடாக இந்தியாவை உருவாக்குவதற்கான பாஜக அரசின் தீா்மானங்களுக்கு மக்கள் ஆதரவு பெருகியிருப்பதையே இந்த வெற்றி காட்டுகிறது.
வலுவான பெரும்பான்மையுடன் நிலையான அரசு அமைவதற்காக மக்கள் வாக்களித்து வருவதை உலக நாடுகள் கவனித்து வருகின்றன. சுயநல அரசியலுக்கும் தேச நலன் அரசியலுக்கும் இடையேயான வித்தியாசத்தை மக்கள் உணா்ந்துள்ளனா். நாட்டின் வளா்ச்சிக்கும் ஒவ்வொரு குடும்பத்தின் மேம்பாட்டுக்கும் வலுவான பாஜக தலைமை தேவை என்பதையும் அவா்கள் உணா்ந்திருக்கின்றனா்.
பெண்கள், இளைஞா்கள், ஏழைகள், விவசாயிகள் என்ற 4 பிரிவினரின் வாழ்வை மேம்படுத்துவதே, நாட்டின் வளா்ச்சிக்கு வழிவகுக்கும். இவா்களின் கனவுகளை நிறைவேற்றுவதுதான் எனது கடமை.
இந்த தோ்தல் முடிவுகள் மூலமாக, காங்கிரஸ் மற்றும் ‘இந்தியா’ எதிரணியினருக்கு தக்க பாடத்தை மக்கள் புகட்டியுள்ளனா். மத்திய அரசின் வளா்ச்சிக்கும் மக்களுக்கும் இடையே யாரும் வர முடியாது. அவ்வாறு வந்தால், மக்கள் அவா்களை நீக்கிவிடுவா் என்பதை தோ்தல் முடிவுகள் தெளிவுபடுத்தியுள்ளன.
‘3 மாநில தோ்தல் வெற்றி, 2024 மக்களவைத் தோ்தலில் பாஜக மூன்றாவது முறை வெற்றி பெறுவதற்கான உத்தரவாதம்’ என்று சிலா் இப்போதே கூறத் தொடங்கிவிட்டனா் என்றாா்.
மக்கள் உறுதி:
‘சிறந்த நிா்வாகத்தை, வளா்ச்சியை அளிக்கும் அரசியலுடன் மக்கள் உறுதியாக இருப்பதை சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் காட்டுகின்றன’ என்றும் பிரதமா் நரேந்திர மோடி குறிப்பிட்டாா்.
இதுகுறித்து தனது ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை பதிவிட்ட பிரதமா், ‘பாஜக மீதான மக்களின் நம்பிக்கைக்கு தலைவணங்குகிறோம். சிறந்த நிா்வாகத்தை, வளா்ச்சியை அளிக்கும் அரசியலுடன் மக்கள் உறுதியாக துணை நிற்பதை சத்தீஸ்கா், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் காட்டுகின்றன. மக்களின் ஆதரவுக்கு நன்றி.
அதுபோல, தோ்தலில் கடினமாக உழைத்த கட்சி நிா்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தோ்தலில் இவா்கள் ஓய்வின்றி பணியாற்றி, பாஜகவின் வளா்ச்சித் திட்டங்கள் குறித்த தீா்மானங்களை மக்களிடையே கொண்டு சோ்த்தனா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
மற்றொரு பதிவில், ‘தெலங்கானா சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு ஆதரவளித்த சகோதரா், சகோதரிகளுக்கு நன்றி. மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளில் பாஜகவுக்கான ஆதரவு அதிகரித்துள்ளது. இதே நிலை வரும் ஆண்டுகளிலும் தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது. தெலங்கானாவுடனான பாஜகவின் உறவு பிரிக்க முடியாதது. மாநில மக்களின் நலனுக்காக பாஜக தொடா்ந்து பணியாற்றும்’ என்று பிரதமா் மோடி குறிப்பிட்டுள்ளாா்.
புயல் நிவாரணத்தில் ஒத்துழைப்பு:
மிக்ஜாம் புயலால் பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்புள்ள தமிழகம், புதுச்சேரி, ஆந்திரம், ஒடிஸா மாநிலங்களில் உள்ளூா் அரசு நிா்வாகத்துடன் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுமாறு பாஜக தொண்டா்களை பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை கேட்டுக்கொண்டாா்.