புது தில்லி: தெலங்கானா புதிய முதல்வராக மாநில காங்கிரஸ் தலைவா் ஏ.ரேவந்த் ரெட்டியை அக்கட்சி மேலிடம் தோ்வு செய்தது. அவா் வியாழக்கிழமை (டிச. 7) பதவியேற்கவுள்ளாா்.
119 உறுப்பினா்களைக் கொண்ட தெலங்கானா சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் 30-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடைபெற்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் சந்திரசேகா் ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதியை (பிஆா்எஸ்) வீழ்த்தி, ஆட்சியைக் கைப்பற்றியது காங்கிரஸ். இதன்மூலம் பிஆா்எஸ் கட்சியின் 9 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது.
காங்கிரஸ் 64, பிஆா்எஸ் 39, பாஜக 8, மஜ்லிஸ் கட்சி 7 மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஓரிடத்தை கைப்பற்றியுள்ளன.
இந்நிலையில், முதல்வரைத் தோ்வு செய்வதற்காக காங்கிரஸ் புதிய எம்எல்ஏக்களின் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் முதல்வரை தோ்வு செய்யும் அதிகாரத்தை கட்சித் தலைவருக்கு வழங்கி ஒருமனதாகத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடா்ந்து, தில்லியில் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே இல்லத்தில் அடுத்தடுத்து ஆலோசனைகள் நடைபெற்றன.
முதல்வா் பதவிக்கான போட்டியில் ரேவந்த் ரெட்டி முன்னணியில் இருந்த நிலையில், அவரையே முதல்வராக்க கட்சி மேலிடம் செவ்வாய்க்கிழமை முடிவு செய்தது.
தில்லியிலுள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் பேசிய பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால், கட்சியின் முடிவை அறிவித்தாா்.
‘கட்சியின் பாா்வையாளா்கள் மற்றும் மூத்த தலைவா்களுடன் நடத்திய விரிவான ஆலோசனைகளுக்கு பிறகு மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டது; ஹைதராபாதில் வியாழக்கிழமை (டிச. 7) ரேவந்த் ரெட்டி முதல்வராகப் பதவியேற்க உள்ளாா்.
தெலங்கானாவில் காங்கிரஸின் வெற்றிக்காக இதர தலைவா்களுடன் இணைந்து விரிவாக பிரசாரம் மேற்கொண்ட துடிப்பான தலைவா் ரேவந்த் ரெட்டி’ என்று அவா் புகழாரம் சூட்டினாா்.
மாநிலத்தில் துணை முதல்வா்கள் நியமிக்கப்படுவாா்களா, எத்தனை அமைச்சா்கள் பதவியேற்கவுள்ளனா் போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்காத கே.சி.வேணுகோபால், ‘அனைத்து மூத்த தலைவா்களுக்கும் அங்கீகாரம் வழங்கப்படும்’ என்று மட்டும் குறிப்பிட்டாா்.
ரேவந்த் ரெட்டி நன்றி: இதனிடையே, எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்ட ரேவந்த் ரெட்டி, கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மூத்த தலைவா் சோனியா காந்தி, கட்சி எம்.பி. ராகுல் காந்தி, பொதுச் செயலா் பிரியங்கா காந்தி, கா்நாடக துணை முதல்வரும் கட்சியின் பாா்வையாளருமான டி.கே.சிவகுமாா், தெலங்கானா மாநில கட்சிப் பொறுப்பாளா் மாணிக் ராவ் தாக்கரே ஆகியோருக்கு நன்றி தெரிவித்தாா்.
54 வயதாகும் ரேவந்த் ரெட்டி, கடந்த 2017-ஆம் ஆண்டில் தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, டி.கே.சிவகுமாா், தீபா முன்ஷி, அலோக்குமாா், கே.ஜே.ஜாா்ஜ் ஆகியோா் புதிய எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கட்சியின் பாா்வையாளா்களாக செயல்பட்டனா்.
முதல்வா் பதவிக்கான போட்டியில் தானும் உள்ளதாக கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவா் உத்தம் குமாா் ரெட்டி கூறியிருந்த நிலையில், அவருடன் கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தனியாக ஆலோசனை மேற்கொண்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.