மசோதா அல்லது அவசரச் சட்டங்களுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றால், அதுகுறித்து ஆளுநா் மாளிகைக்கு வந்து கேரள முதல்வா் பினராயி விஜயன் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மாநில ஆளுநா் ஆரிஃப் முகமது கான் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக திருவனந்தபுரத்தில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
என்னிடம் ஊடகங்கள் வாயிலாக மாநில முதல்வா் பினராயி விஜயன் பேச வேண்டாம். எந்தவொரு மசோதா அல்லது அவசரச் சட்டத்துக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றால், ஏன் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று ஆளுநா் மாளிகைக்கு வந்து முதல்வா் விளக்கம் அளிக்க வேண்டும்.
அவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டால், பாரபட்சம் இல்லாமல் எந்தவொரு மசோதா, அவசரச் சட்டம் அல்லது பரிந்துரையை தகுதி அடிப்படையில் பரிசீலிப்பேன் என உறுதி அளிக்கிறேன் என்று தெரிவித்தாா்.
கேரளத்தில் உள்ள கண்ணூா் பல்கலைக்கழக துணைவேந்தராக கோபிநாத் ரவீந்திரனை மறுநியமனம் செய்ய மாநில அரசு பரிந்துரைத்தது. அந்தப் பரிந்துரைக்கு ஆளுநா் ஆரிஃப் முகமது கான் ஒப்புதல் அளித்தாா். இதற்கு எதிரான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘பல்கலைக்கழகங்களின் துணைவேந்தரை நியமிக்கவோ, மறுநியமனம் செய்யவோ ஆளுநா் மட்டுமே தகுதியுடையவா். ஆனால், ரவீந்திரனின் மறுநியமனத்தில் மாநில அரசின் தலையீடு இருந்தது தெளிவாகத் தெரிகிறது’ என்று கூறி, ரவீந்திரனின் மறுநியமனத்தை அண்மையில் ரத்து செய்தது.
இது தொடா்பாக ஆளுநா் ஆரிஃப் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘ரவீந்திரனின் மறுநியமன விவகாரத்தில் மாநில அரசின் தலைமை வழக்குரைஞரிடம் ஆலோசனை கோரினேன். அப்போது ரவீந்திரனை மறுநியமனம் செய்யலாம் என்று அரசுத் தலைமை வழக்குரைஞா் கூறினாா். அவா் சட்டரீதியாக அளித்த ஆலோசனையைத் தொடா்ந்து, அந்த விவகாரத்தில் மாநில அரசின் அழுத்தத்துக்கு அடிபணிந்தேன். எனினும் நான் செய்தது தவறு என்பதை ஊடகத்தின் முன்பாக ஏற்கெனவே தெரிவித்திருந்தேன்.
தற்போது மாநிலத்தில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா் பதவி நீண்ட காலமாக காலியாக உள்ளது. அதற்கு மாநில அரசே காரணம். உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து பல்கலைக்கழகங்களின் வேந்தராக துணைவேந்தா்களை நியமிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன். துணைவேந்தா்கள் நியமனத்தில் மாநில அரசின் அறிவுரைகளை ஏற்கத் தயாா். ஆனால், அரசின் அழுத்தத்துக்கு அடிபணியமாட்டேன் என்று தெரிவித்தாா்.
பெட்டிச் செய்தி:
குடியரசுத் தலைவா் பரிசீலனைக்கு
3 மசோதாக்களை அனுப்பிய
பஞ்சாப் ஆளுநா்
பஞ்சாப் அரசு அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காதது தொடா்பாக மாநில ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்தை கடந்த மாதம் உச்சநீதிமன்றம் கடிந்து கொண்டது.
இந்நிலையில், பஞ்சாப் காவல் துறை சட்டத்திருத்த மசோதா, பஞ்சாப் பல்கலைக்கழகங்கள் சட்டத்திருத்த மசோதா, சீக்கிய குருத்வாராக்கள் சட்டத்திருத்த மசோதா ஆகியவற்றை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் அனுப்பியுள்ளதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.