இறைச்சிக்கடை, ஒலிப்பெருக்கிகள்: ம.பி. முதல்வரின் முதல் நடவடிக்கை
திறந்தவெளியில் இறைச்சிக்கடைகளை நடத்துவதற்கும், வழிபாட்டுத் தலங்களில் விதிகளை மீறி வைக்கப்படும் ஒலிப்பெருக்கிகளுக்கு தடை விதிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் மோகன் யாதவ், திறந்தவெளியில் இறைச்சிக்கடைகளை நடத்துவதற்கும், வழிபாட்டுத் தலங்களில் விதிகளை மீறி வைக்கப்படும் ஒலிப்பெருக்கிகளுக்கு தடை விதிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
போபாலில் இன்று மாநிலத்தின் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டதாகவும், திறந்தவெளியில் இறைச்சிக்கடைகள் செயல்படுவதைத் தடுத்து வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கவும் இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாகக் முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமைத் தீர்ப்பாயங்கள் அளித்திருக்கும் உத்தரவுகளை பின்பற்றி, இவற்றுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உடனடியாக உருவாக்கிடவும் அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
வழிபாட்டுத் தலங்களில் வைக்கப்பட்டிருக்கும் ஒலிப்பெருக்கிகளின் ஒலி அளவை கண்காணிக்க பறக்கும் படையை அமைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தின் முதல்வராக இருந்த சிவராஜ் சிங் சௌஹான் பதவிக்காலம் முடிந்து பேரவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று தற்போது மோகன் யாதவ் முதல்வராக பதவியேற்றுள்ளார்.
மத்திய பிரதேச தலைநகா் போபாலில் உள்ள லால் பரேடு மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், மாநிலத்தின் 19-ஆவது முதல்வராக மோகன் யாதவ் பதவியேற்றாா். துணை முதல்வா்களாக ஜகதீஷ் தேவ்டா, ராஜேந்திர சுக்லா ஆகியோா் பதவியேற்றனா். மாநில ஆளுநா் மங்குபாய் படேல் அவா்களுக்கு பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்துவைத்தாா்.
மூன்று முறை பாஜக எம்எல்ஏவான மோகன் யாதவ், ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு நெருக்கமானவா் என்பது குறிப்பிடத்தக்கது.