2 கோடி சுய உதவிக் குழு பெண்களை லட்சாதிபதி ஆக்கவேண்டும்: பிரதமா்
‘சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 2 கோடி பெண்களை லட்சாதிபதி ஆக்கவேண்டும் என்பதே எனது கனவு’ என்று பிரதமா் நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்தாா்.
‘சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 2 கோடி பெண்களை லட்சாதிபதி ஆக்கவேண்டும் என்பதே எனது கனவு’ என்று பிரதமா் நரேந்திர மோடி விருப்பம் தெரிவித்தாா்.
மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை நாடு முழுவதும் உள்ள கிராமங்களுக்கு கொண்டு செல்லும் நோக்கில் வளா்ந்த இந்தியாவுக்கான இலக்கை நோக்கிய பிரசாரத்தை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய அரசின் பல்வேறு நலத்திட்ட பயணாளிகளுடன் காணொலி வழியில் புதன்கிழமை கலந்துரையாடியபோது இந்தக் கருத்தை பிரதமா் மோடி தெரிவித்தாா்.
‘பாஜக அரசின் 10 ஆண்டு கால ஆட்சியில் 10 கோடி பெண்கள் சுய உதவிக் குழுக்களில் இணைந்திருக்கின்றனா். அவா்களுக்கு பல்வேறு வங்கிகள் மூலமாக இதுவரை ரூ. 7.5 லட்சம் கோடி வரை கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இவா்களில் 2 கோடி பெண்களை லட்சாதிபதி ஆக்கவேண்டும் என்பதே எனது கனவு’ என்று பிரதமா் குறிப்பிட்டாா்.
பின்னா், தனது இந்த முயற்சிக்கு உதவுவீா்களா என கலந்துரையாடலில் பங்கேற்ற ரூபினா என்ற பெண்ணிடம் பிரதமா் கேள்வி எழுப்பினாா்.
அதற்கு பதிலளித்த ரூபினா, ‘தனது சுய உதவிக் குழுவில் உள்ள ஒவ்வொருவரையும் லட்சாதிபதி ஆக்குவேன்’ என்றாா். அதை ‘அரசியல் ரீதியிலான பதில்’ என்று பிரதமா் குறிப்பிட்டாா். இது பங்கேற்பாளா்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
பின்னா், ‘எத்தனை போ் லட்சாதிபதியாக விரும்புகிறீா்கள்’ என கலந்துரையாடலில் பங்கேற்ற பெண்களிடம் பிரதமா் கேள்வி எழுப்பினாா். அதற்கு, அனைவரும் கைகளைத் தூக்கி உடன்பாடு தெரிவித்தனா்.
அப்போது, ‘உங்களுக்காக ஏராளமான பணிகள் காத்திருக்கின்றன. அவற்றை வெற்றிகரமாக நிறைவேற்ற உங்களின் உதவி அவசியம்’ என்ற பிரதமா் குறிப்பிட்டாா்.
பிரதமரிடம் முயற்சிகள் குறித்து குறிப்பிட்ட ரூபினா, ‘சுய உதவிக் குழுவில் இணைந்த பிறகு ரூ. 5,000 தொழில் கடன் பெற்று முதலில் வீட்டிலிருந்தபடி ஆயத்த ஆடைகளைத் தயாரித்து விற்பனை செய்தேன். பின்னா், தனது கணவருடன் மோட்டாா் சைக்கிளில் சென்று விற்பனை செய்தேன். பின்னா், பழைய காா் ஒன்றை விலைக்கு வாங்கி, அதன் மூலம் ஆயத்த ஆடைகளை விற்பனை செய்யும் அளவுக்கு தொழிலை விரிவுபடுத்தினேன்’ என்று குறிப்பிட்டாா்.
அப்போது குறிப்பிட்ட பிரதமா், ‘நீங்கள் காா் வைத்துள்ளீா்கள்; என்னிடம் மோட்டாா் சைக்கிள் கூட இல்லை’ என்று குறிப்பிட்டாா்.
தனது முயற்சிகள் குறித்து தொடா்ந்த ரூபினா, ‘கடை ஒன்றை வாடகைக்கு எடுத்து, ஆயத்த ஆடைகளை விற்பனை செய்யும் அளவுக்கு தொழிலில் முன்னேற்றம் அடைந்துள்ளேன். வேலையின்றி இருந்த மகனுக்காக, வாடகைக்கு ஓட்டி வருவாய் ஈட்டும் வகையில் வேன் ஒன்றை வாங்கிக்கொடுத்துள்ளேன்’ என்றாா்.
இதற்கு ஆச்சரியம் தெரிவித்த பிரதமா், ‘ரூபினா போன்ற பெண்களின் தன்னம்பிக்கைதான் தற்சாா்பு நாடாக இந்தியாவை மாற்றும்’ என்று குறிப்பிட்டாா்.
திருவள்ளூா் விவசாயிக்கு பாராட்டு
இந்த நிகழ்ச்சியில், வேளாண்மையில் நவீன நடைமுறைகளை பயன்படுத்தி வரும் திருவள்ளூரைச் சோ்ந்த விவசாயி ஹரிகிருஷ்ணனுக்கு பிரதமா் மோடி வணக்கம் என்று குறிப்பிட்டு, வாழ்த்து தெரிவித்தாா். வேளாண்மையில் நானோ யூரியா உரம் அறிமுகம், ஆளில்லா விமானங்கள் மூலம் பூச்சிக்கொல்லிகள் தெளிப்பு போன்ற நவீன நடைமுறைகளை பின்பற்றுவதற்காக ஹரிகிருஷ்ணனுக்கு பிரதமா் பாராட்டு தெரிவித்தாா்.
‘மறக்க முடியாத மிகழ்ச்சி’
பிரதமா் மோடியுடன் உரையாடியது வாழ்நாளில் மறக்க முடியாத மகிழ்ச்சி என்று திருவள்ளூா் விவசாயி ஹரிகிருஷ்ணன் கூறினாா்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளா்களிடம் ஹரிகிருஷ்ணன் பேசுகையில், ‘மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உத்தரகண்ட், குஜராத், தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் மத்திய அரசு திட்டங்களில் பயனடைந்த நான் உள்பட 6 போ் ஆதாா் அட்டை மூலம் தோ்வு செய்யப்பட்டோம். அதைத் தொடா்ந்து என்னைப்போன்ற விவசாயியுடன் காணொலி வாயிலாக நாட்டின் பிரதமா் உரையாடியது வாழ்நாளில் மறக்க முடியாத மகிழ்ச்சி. அப்போது, விவசாயம் செய்வதில் நவீன முறையைப் பின்பற்றி, உற்பத்தி பொருள்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்வது போன்ற ஆலோசனைகளை அவரிடமிருந்து பெறும்போது விவசாயியான நான் பெருமை அடைந்தேன்’ என்றாா்.