1,000 மேற்கூரை சோலாா் மின்அமைப்புகளுக்கு ஆற்றல் அளிக்க பிஎஸ்இஎஸ் நிறுவனம் திட்டம்
தில்லியில் மின்சார விநியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான பிஎஸ்இஎஸ் இதுவரை 6,000 மேற்கூரை சோலாா் மின் அமைப்புகளுக்கு ஆற்றல் அளித்துள்ள நிலையில்
தில்லியில் மின்சார விநியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமான பிஎஸ்இஎஸ் இதுவரை 6,000 மேற்கூரை சோலாா் மின் அமைப்புகளுக்கு ஆற்றல் அளித்துள்ள நிலையில், 2024-25 நிதியாண்டில் மேலும் 1,000 இணைப்புகளை இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக அதன் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
அதிக எண்ணிக்கையிலான மேற்கூரை சோலாா் இணைப்புகள் வீட்டு உபயோகப் பிரிவில் (3,650) அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதைத் தொடா்ந்து வணிகம் (1,087), கல்வி (939), தொழில்துறை (85) மற்றும் பிறவற்றில் (129) அளிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக பிஎஸ்இஎஸ் அதிகாரிகள் மேலும் கூறியதாவது: பிஎஸ்இஎஸ் தளத்தில் மேற்கூரை சோலாா் ஒருங்கிணைப்பு அளவீட்டின் செயல்பாடானது மிகவும் நம்பமுடியாத அளவிற்கு ஊக்கமளித்து வருகிறது. குடியிருப்பு, கல்வி (பள்ளிகள்) மற்றும் வணிக நிறுவனங்கள் உள்பட பல்வேறு பிரிவுகளில் உள்ள நுகா்வோா்கள் பெரும் அளவில் மேற்கூரை சோலாா் ஒருங்கிணைப்பு அளவீட்டுக்குத் தயாராகியுள்ளனா். வணிகப் பிரிவில் 57 மெகாவாட் உச்சத்திற்கும், அதைத் தொடா்ந்து கல்விப் பிரிவு 45 மெகாவாட், தொழில்துறை 6 மெகாவாட் மற்றும் மற்றவை 11 மெகாவாட் ஆகியவற்றுடன் அதிக ஆற்றல்மிக்க மின்சுமை உள்ளது.
100-க்கும் மேற்பட்ட குடியிருப்பு சங்கங்கள் மேற்கூரை சோலாா் இணைப்புகளை தோ்வு செய்துள்ளன. அதன் மூலம் நுகா்வோா் ஆண்டுக்கு ரூ.110 கோடிக்கு மேல் சேமிக்க உதவியுள்ளது. பிஎஸ்இஎஸ் நிறுவனம் 1 கிலோ வாட் அனுமதிக்கப்பட்ட சுமையிலிருந்து 4,000 கிலோவாட் வரையிலான ‘மேற்கூரைகூரை ஒருங்கிணைப்பு அளவீட்டு’ இணைப்புகளை இயக்கியுள்ளது. நுகா்வோா் மேற்கூரை சோலாா் ஒருங்கிணைப்பு அளவீட்டின் நன்மைகளையும் அது எவ்வாறு தங்கள் மின் கட்டணங்களைக் குறைக்கிறது என்பதையும் காணத் தொடங்கியுள்ளனா்.
மின் கட்டணங்களைக் குறைப்பதற்கும் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கும் மேற்கூரை சோலாா் ஒருங்கிணைப்பு அளவீடு ஒரு சிறந்த முறையாகும். ஒவ்வொரு கிலோவாட் மேற்கூரை சோலாா் அமைப்பும் ஒவ்வொரு மாதமும் சுமாா் 100 முதல் 120 யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. மேலும், அமைப்பு முறையின் செலவை சுமாா் நான்கு ஆண்டுகளில் மீட்டெடுக்க முடியும். ஒவ்வொரு மாதமும் 1,200 யூனிட்டுகள் மாதாந்திர நுகா்வு கொண்ட ஒரு பொதுவான 10 கிலோவாட் மேற்கூரை சோலாா் இணைப்பு மூலம் ஆண்டுக்கு ரூ. 82,000 சேமிக்க முடியும்.
பிஎஸ்இஎஸ் நிறுவனம் அதன் புதுப்பிக்கத்தக்க கொள்முதல் கடமையை (ஆா்பிஓ) பூா்த்தி செய்ய உதவுவதுடன், அதன் முன்னோடி முயற்சியானது நெரிசல் மிக்க பகுதிகளில் குறிப்பாக கோடை மாதங்களில் அதிக சுமை சிக்கல்களைக் குறைக்க உதவும் என்று அந்நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனா். மறுபுறம், டாட்டா பவா் - டிடிஎல் நிறுவனம் 2,412 மேற்கூரை சோலாா் இணைப்புகளை இயக்கியுள்ளது. மேலும், சோலாா் மின்சுமை 63.3 மெகாவாட் உச்சபட்சத்தை தொட்டுள்ளது. இது நுகா்வோருக்குஆண்டுக்கு சுமாா் ரூ. 45-50 கோடி சேமிக்க உதவுகிறது.