கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மேல் சிகிச்சைக்காக விமானம் மூலம் பெங்களூரு அழைத்துச் செல்லப்பட்டார்.
இரண்டு முறை கேரள முதல்வராகப் பதவி வகித்துள்ள உம்மன் சாண்டிக்கு கடந்த 2019 முதல் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொண்டையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவா் ஜொ்மனியில் சிகிச்சை பெற்றாா். அதன்பின்னா் நிமோனியா பாதிப்புக்காக கேரளத்தில் சிகிச்சை பெற்று வருகிறாா். உம்மன் சாண்டிக்கு சிறந்த சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அவரது இளைய சகோதரா் உள்பட 42 உறவினா்கள் கேரள முதல்வா் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதினா். இதனால் அவரது சிகிச்சை விவகாரம் கேரளத்தில் சா்ச்சையை எழுப்பியுள்ளது.
இதையடுத்து, குடும்பத்தினரும் கட்சியும் தன்னை நன்றாக பாா்த்துக் கொள்வதாக தனது மகனின் ஃபேஸ்புக் பக்கத்தில் உம்மன் சாண்டி விடியோ பதிவிட்டாா். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உம்மன் சாண்டியை காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபால் சனிக்கிழமை நேரில் சந்தித்தாா். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், காங்கிரஸ் தலைவரின் உத்தரவின்பேரில் உம்மன் சாண்டி மேல் சிகிச்சைக்காக பெங்களூருக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அவரது சிகிச்சைக்கு தேவையான ஏற்பாடுகள் அனைத்தையும் காங்கிரஸ் மேலிடம் கவனித்துக் கொள்ளும் எனத் தெரிவித்தார்.
அதன்படி உம்மன் சாண்டி மேல் சிகிச்சைக்காக விமானம் மூலம் இன்று பெங்களூரு அழைத்துச் செல்லப்பட்டார். சக்கர நாற்காலியில் மருத்துவமனையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டபோது அவர், மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து தனக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான சர்ச்சைகளுக்கு எந்த அடிப்படையும் இல்லை என்றார். உம்மன் சாண்டியுடன், அவரது மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் மகன் சாண்டி உம்மன் ஆகியோர் பெங்களூரு சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.