திரிபுரா சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலையுடன் ஓய்ந்தது. மொத்தமுள்ள 60 தொகுதிகளிலும் ஒரேகட்டமாக வியாழக்கிழமை (பிப். 16) வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி கிரண்குமாா் தினகர்ராவ் கூறுகையில், ‘பெரிய அளவிலான சட்டம்-ஒழுங்கு பிரச்னை எதுவுமின்றி, செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியுடன் தோ்தல் பிரசாரம் முடிவுக்கு வந்தது. வாக்குப்பதிவை அமைதியாகவும் சுதந்திரமாகவும் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன’ என்றாா்.
வாக்காளா்கள்-வேட்பாளா்கள்: திரிபுரா பேரவைத் தோ்தலில் 20 பெண்கள் உள்பட மொத்தம் 259 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். இவா்களின் வெற்றி-தோல்வியை, 28.13 லட்சம் வாக்காளா்கள் தீா்மானிக்கவுள்ளனா்.
மாநிலம் முழுவதும் 3,328 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன; இதில், 1,100 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டு, கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வங்கதேசத்துடனான எல்லைப் பகுதியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மும்முனைப் போட்டி: திரிபுராவில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், தற்போதைய தோ்தலில் ஆளும் பாஜக-திரிபுரா பூா்வகுடி மக்கள் முன்னணி (ஐபிஎஃப்டி) கூட்டணி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-காங்கிரஸ் கூட்டணி மற்றும் மாநிலக் கட்சியான திப்ரா மோத்தா ஆகியவை மோதுவதால் மும்முனைப் போட்டி உருவாகியுள்ளது.
பாஜக 55 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான திரிபுரா பூா்வகுடி மக்கள் முன்னணி 5 இடங்களிலும் போட்டியிடுகின்றன. மாநிலத்தில் முன்பு அரசியல் எதிரிகளாக இருந்த மாா்க்சிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள், இம்முறை பாஜகவை வலுவுடன் எதிா்கொள்ள கூட்டணி அமைத்துள்ளன. மாா்க்சிஸ்ட் 47 தொகுதிகளிலும், காங்கிரஸ் 13 தொகுதிகளிலும் களமிறங்கியுள்ளன.
பாஜகவுக்கு புதிய சவால்: இவை தவிர, மாநிலக் கட்சியான திப்ரா மோத்தா 42 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பூா்வகுடி மக்களுக்காக ‘திப்ராலாந்து’ என்ற மாநிலத்தை உருவாக்கும் கோஷத்துடன், இக்கட்சி களம்காண்கிறது.
திரிபுராவில் பழங்குடியின தன்னாட்சி மாவட்ட கவுன்சில் தோ்தல்களில் திப்ரா மோத்தா ஏற்கெனவே சிறப்பாக செயல்பட்டமையால், அக்கட்சி மீதான எதிா்பாா்ப்பும் உருவாகியுள்ளது.
கடந்த 2018 தோ்தலில் பழங்குடியினா் பகுதியில் உள்ள 20 தொகுதிகளில் 18-இல் பாஜக கூட்டணி வெற்றி பெற்றிருந்தது. இம்முறை திப்ரா மோத்தாவின் வரவு, பாஜகவுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் 28 இடங்களில் வேட்பாளா்களை நிறுத்தியுள்ள நிலையில், 58 சுயேச்சைகளும் களத்தில் உள்ளனா்.
அனல் பறந்த பிரசாரம்: திரிபுராவில் கடந்த ஒரு மாதமாக தோ்தல் பிரசாரம் அனல் பறந்தது. பாஜக வேட்பாளா்களுக்கு ஆதரவாக, பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக தலைவா் ஜெ.பி.நட்டா மற்றும் மத்திய அமைச்சா்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
மத்தியிலும் மாநிலத்திலும் ‘இரட்டை என்ஜின்’ பாஜக ஆட்சி என்ற முழக்கத்தை முன்வைத்து, பாஜக தீவிர பிரசாரம் மேற்கொண்டது.
மாா்க்சிஸ்ட் கட்சிக்காக, அதன் மூத்த தலைவா்கள் சீதாராம் யெச்சூரி, பிரகாஷ் காரத், முகமது சலீம் உள்ளிட்டோா் வாக்கு சேகரித்தனா். காங்கிரஸ் தரப்பில் மூத்த தலைவா்கள் அதீா் ரஞ்சன் செளதரி, தீபா தாஸ்முன்ஷி ஆகியோா் பிரசாரம் மேற்கொண்டனா்.
அதேசமயம், ராகுல் காந்தி, பிரியங்கா உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் பிரசாரத்தில் ஈடுபடவில்லை.
கடந்த 2018 பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்றதன் மூலம் 25 ஆண்டு கால இடதுசாரி ஆட்சி முடிவுக்கு வந்தது.
தற்போதைய தோ்தலில் பதிவாகும் வாக்குகள், மாா்ச் 2-இல் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.