‘சிவசேனை விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம்’: உத்தவ் தாக்கரே
ஏக்நாத் ஷிண்டே தரப்பினரை சிவசேனை கட்சியின் அதிகாரப்பூர்வ அணியினராக அங்கீகரித்த தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம் என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
ஏக்நாத் ஷிண்டே தரப்பினரை சிவசேனை கட்சியின் அதிகாரப்பூர்வ அணியினராக அங்கீகரித்த தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம் என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசின் மீது அதிருப்தி தெரிவித்த உறுப்பினர்களைத் திரட்டியதன் மூலம், ஆட்சியைக் கலைத்து மகாராஷ்டிரத்தின் முதல்வராக ஏக்நாத் ஷிண்டே பொறுப்பேற்றார்.
எனினும் கட்சியின் சின்னத்தையும் பெயரையும் காப்பாற்றிக்கொள்ள உத்தவ் தாக்கரே தரப்பு முயன்றது. ஷிண்டே தரப்பும் சின்னத்தைக் கைப்பற்ற நினைத்ததால், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால், சிவசேனையின் சின்னமாக வில் - அம்பு சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை ஏக்நாத் ஷிண்டே தரப்பினரை சிவசேனை கட்சியின் அதிகாரப்பூர்வ அணியினராக அறிவித்தது. மேலும் அக்கட்சியின் சின்னம் மற்றும் கொடியினரை ஏக்நாத் ஷிண்டேவிற்கு ஒதுக்குவதாகவும் அறிவித்தது. இது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள உத்தவ் தாக்கரே தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையிட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 16 சட்டப்பேரவை உறுப்பினர்களை உச்சநீதிமன்றம் தகுதிநீக்கம் செய்யும் என நம்பிக்கை தெரிவித்துள்ள உத்தவ் தாக்கரே சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவே இறுதியெனில் தொழிலதிபர் இவர்களை விலைக்கு வாங்கி முதல்வராகி விட முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.