மணீஷ் சிசோடியா கைது: கேஜரிவால் கண்டனம்
தில்லியில் மதுபானக் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டதில் மோசடி நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக தில்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா
புதுதில்லி: தில்லியில் மதுபானக் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டதில் மோசடி நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக தில்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஞாயிற்றுக்கிழமை விசாரணைக்கு ஆஜரான நிலையில், தற்போது அவரை சிபிஐ கைது செய்துள்ளது. இதற்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தில்லியில் மதுபானக் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டதில் மோசடி நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் இல்லம் மற்றும் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகளால் சோதனை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவரிடம் விசாரணையும் நடைபெற்றது. மூன்று மாதங்களுக்கு முன்பாக இது குறித்து குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதமும் சோதனை நடைபெற்ற நிலையில், மணீஷ் சிசோடியாவுக்கு சிபிஐ மீண்டும் சம்மன் அனுப்பியது.
தில்லி அரசின் பட்ஜெட் தொடர்பான வேலைகள் நடந்து கொண்டிருப்பதால் மதுபானக் கொள்கை மாற்ற மோசடி வழக்கில் சிபிஐக்கு பதிலளிக்க கால அவகாசம் வேண்டுமென மணீஷ் சிசோடியா தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இரண்டாம் கட்ட விசாரணைக்கு பிப்.19 ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பிய நிலையில் மணீஷ் சிசோடியா தில்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆஜரானார்.
அவரிடம் சிபிஐ அதிகாரிகள் 8 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தி வந்ததால் பரபரப்புகள் நிலவியது. அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரான மணீஷ் சிசோடியாவை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைதுக்கு முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கண்டனம் தெரிவிகத்துள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள கண்டன பதிவில், மணீஷ் சிசோடியா குற்றமற்றவர். அவரை கைது செய்ததற்கு பின்னால் அரசியல் நோக்கமும் உள்ளது. இந்த செயல் மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் அனைத்தையும் புரிந்து கொண்டுள்ளனர். இதற்கு மக்கள் பதிலளிப்பார்கள். இதுபோன்ற செயல்கள் நமது உற்சாகத்தை மேலும் ஏதிகரிக்கும். நமது போராட்டம் மேலும் வலுவடையும் என கேஜரிவால் தெரிவித்துள்ளார்.