சுவாமி சிலைகள் திருட்டு வழக்கில் "41 டைரிகள்' காணாமல் போன விவகாரம்; எஸ்ஐடி விசாரணை கோரும் மேல்முறையீட்டு மனு: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
சுவாமி சிலைகள் திருட்டு வழக்கின் 41 "கேஸ் டைரிகள்' காணாமல் போனது அல்லது திருட்டுப் போன விவகாரத்தில் ஓய்வு பெற்ற காவல் உயரதிகாரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு
சுவாமி சிலைகள் திருட்டு வழக்கின் 41 "கேஸ் டைரிகள்' காணாமல் போனது அல்லது திருட்டுப் போன விவகாரத்தில் ஓய்வு பெற்ற காவல் உயரதிகாரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி வழக்குரைஞர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது தமிழக அரசுக்கும், காவல் துறை தலைமை இயக்குநருக்கும் நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
கடந்த 2020-ஆம் ஆண்டில், சுவாமி சிலைகள் திருட்டு வழக்கில் தொடர்புடைய 41 "கேஸ் டைரிகள்' காவல் நிலையங்களில் இருந்து திருட்டுப்போனதாககவும், காணாமல் போனதாகவும் கூறப்படும் விவகாரத்தில் வழக்குப் பதிந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், ஓய்வு பெற்ற திறன்மிக்க காவல் துறை அதிகாரி தலைமையில் விசாரணை குழுவை அமைத்து, நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரிக்க உத்தரவிட கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் யானை ஜி. ராஜேந்திரன் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு கடந்த ஆண்டு ஜூலை 8-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், "இந்த கேஸ் டைரிகளை உரிய வகையில் பாதுகாக்கும் பொறுப்புக்குரிய அதிகாரிகளின் பெயர்களைக் கண்டறிந்து, ஏதேனும் கவனக்குறைவு இருப்பது கண்டறியப்பட்டால் அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளை விரைந்து விசாரித்து அதன் இறுதி அறிக்கையை தொடர்புடைய நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டு மனுவை முடித்துவைத்தது.
இந்த நிலையில், வழக்குரைஞர் யானை ஜி.ராஜேந்திரன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞர் ஜி.எஸ். மணி மூலம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், உயர்நீதிமன்றம் சில உத்தரவுகளைப் பிறப்பித்து இருந்தபோதிலும் அந்த உத்தரவுகளைச் செயல்படுத்த சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளும், அரசுத் துறையும் உரிய வகையில் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் ஓய்வு பெற்ற திறன்மிக்க காவல் துறை அதிகாரி தலைமையில் சிறப்புப் புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை உயர்நீதிமன்றம் உரிய வகையில் பரிசீலிக்கவில்லை. இதனால், கேஸ் டைரிகள் காணாமல் போன விவகாரத்தில் தவறிழைத்த காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எஸ்ஐடி விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும்' என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி வி.ராமசுப்ரமணியன், பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்- வழக்குரைஞர் யானை ராஜேந்திரனுடன் வழக்குரைஞர் ஜி.எஸ். மணி ஆஜாராகி வாதிடுகையில், "இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை' என்றார்.
அப்போது நீதிபதிகள் அமர்வு, மொத்தம் 41 கேஸ் டைரிகள் காணாமல் போனதாகக் கூறப்பட்ட விவகாரத்தில் எத்தனை டைரிகள் மறுஉருவாக்கம் செய்யப்பட்டுள்ளன என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு , ஜி.எஸ். மணி, "மொத்தம் 41 கேஸ் டைரிகள் திருட்டுப் போன நிலையில், 16 டைரிகள் மட்டுமே மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள கோப்புகள் விவகாரத்தில் ஏதும் நடக்கவில்லை. மேலும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவல் கண்காணிப்பு அதிகாரிகளின் பெயர்களை வேண்டுமென்றே சிலைத் தடுப்புப் பிரிவு குறிப்பிடவில்லை.உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதிலும், 41 திருட்டு வழக்கு டைரிகள் விவகாரத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை' என்றார்.
இதையடுத்து, இந்த விவகாரத்தில் தொடர்புடைய தமிழக அரசின் உள்துறை செயலர், டிஜிபி, ஆணையர், சிலை திருட்டுத் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி உள்ளிட்ட எதிர்மனுதாரர்களுக்கு 6 வாரத்துக்குள் பதிலளிக்கும் வகையில் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.