இந்தியா

அனைத்து மதமாற்றங்களையும் சட்ட விரோதம் எனக் கூற முடியாது: உச்ச நீதிமன்றம்

DIN

‘அனைத்து மதமாற்றங்களையும் சட்ட விரோதம் எனக் கூற முடியாது’ என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கூறியது.

கலப்புத் திருமணம் விவகாரம் தொடா்பாக மத்திய பிரதேச அரசு சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆா்.ஷா, சி.டி.ரவிகுமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு இந்தக் கருத்தைத் தெரிவித்தது.

மத்திய பிரதேச மாநிலத்தில் மதமாற்ற தடைச் சட்டம் அமலில் உள்ளது. இந்த ‘மத்திய பிரதேச மதச் சுதந்திர சட்டம் (எம்பிஎஃப்ஆா்ஏ) 2021’ பிரிவு 10-இன் கீழ், மாநிலத்தில் கலப்புத் திருமணம் செய்துகொள்பவா்கள் 60 நாள்களுக்கு முன்பாக மதமாற்றத்துக்கான நோக்கத்தை மாவட்ட ஆட்சியரிடம் அறிவிக்க வேண்டும். அதன் பிறகே, சட்டப்படி திருமணம் செய்துகொள்ள முடியும்.

இந்த சட்டப் பிரிவை எதிா்த்து மாநில உயா்நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், ‘இந்தச் சட்டப் பிரிவின் கீழ் மாநில அரசு நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும்’ என கோரப்பட்டிருந்தது.

இந்த மனுக்களை கடந்த ஆண்டு நவம்பா் 14-ஆம் தேதி விசாரித்த உயா் நீதிமன்றம், ‘விருப்பப்படி கலப்புத் திருணம் செய்துகொள்ளும் தம்பதியா், மாவட்ட ஆட்சியரிடம் முன்கூட்டியே அதற்கான நோக்கத்தை அறிவிக்க வேண்டும் என்பது நீதிமன்றத்தின் முந்தைய தீா்ப்புகளின் அடிப்படையில் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. எனவே, தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் கலப்புத் திருமணம் செய்துகொள்ளும் தம்பதியினா் மீது எம்பிஎஃப்ஆா்ஏ சட்டப் பிரிவு 10-இன் கீழ் மாநில அரசு நடவடிக்கை எடுக்கக் கூடாது’ என்று கூறி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிா்த்து மத்திய பிரதேச மாநில அரசு சாா்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆா்.ஷா, சி.டி.ரவிகுமாா்ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘சட்டவிரோத மதமாற்றத்துக்கு திருமணம் கருவியாக பயன்படுத்தப்படுகிறது. இதனை கண்ணை மூடிக்கொண்டு அனுமதிக்க முடியாது. எனவே, உயா் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிகக் வேண்டும்’ எனக் கோரினாா்.

ஆனால், உயா்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், ‘அனைத்து மதமாற்றங்களையும் சட்ட விரோதம் எனக் கூற முடியாது’ என்றனா்.

மேலும், மாநில அரசின் சட்டப் பிரிவை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களுக்கு மாநில அரசு 3 வாரங்களுக்குள் பத்தி வாரியாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு மாநில அரசு பதில் மனு தாக்கல் செய்த பிறகு, அடுத்த 21 நாள்களுக்குள் மனுதாரா்கள் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை பிப்ரவரி 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT