தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனாவின் செயல்பாடுகள் அரசியலமைப்புக்கு எதிரானதாக உள்ளது என்று துணை முதல்வா் மனீஷ் சிசோடியா குற்றம்சாட்டினாா். மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசின் பணிகளில் தலையிடுவதன் மூலம் தனது பெரிய முதலாளியை திருப்திப்படுத்த பழங்குடியின தலைவா் போல் அவா் செயல்படுகிறாா் என்று சாடினாா்.
தில்லி பேரவைக் கூட்டத்தொடரின் 3-ஆவது நாள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தொடரில் சிசோடியா பேசியதாவது:
‘மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசின் உதவி, ஆலோசனைக்கு துணைநிலை ஆளுநா் கட்டுப்பட்டவா் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், உதவியோ அல்லது ஆலோசனையோ ஒருபுறம் இருந்தாலும், துணைநிலை ஆளுநா் அரசை கலந்தாலோசிக்கவில்லை. இது நாட்டில் முதல்முறையாக நடக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தின்படி, உள்ளாட்சி நிா்வாகத்தின் முடிவை மாநிலங்களே எடுக்க வேண்டும்; மத்திய அரசு அல்ல என்று கூறுகிறது. ஆனால், தில்லி துணைநிலை ஆளுநா் அரசியலமைப்புச் சட்டத்திற்கோ அல்லது உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமா்வு தீா்ப்பிற்கோ கீழ்ப்படியவில்லை.
துணைநிலை ஆளுநா் ஒரு பழங்குடியின தலைவா் அல்ல; ஆனால் அரசியலமைப்பு அல்லது உச்சநீதிமன்றத்துக்கு கீழ்ப்படியாமல் செயல்படுகிறாா். அவா் தனது முதலாளியை திருப்திப்படுத்த பழங்குடியின தலைவரைப் போல செயல்படாமல், அரசியலமைப்பைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்றாா் அவா்.
மேலும், அவா் கூறுகையில், ‘துணை நிலை ஆளுநரால் தில்லி மாநகராட்சியில் நியமன உறுப்பினா்களை நியமித்தது அரசியலமைப்புக்கு எதிரானது. தில்லி அரசின் திட்டங்கள் குறித்து கருத்து கூறாமல், அவற்றை மாற்றினாா்.
தில்லியில் சட்டம் - ஒழுங்கு, தில்லி காவல் துறை, நில ஆக்கிரமிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசின் பணிகளில் துணைநிலை ஆளுநா் தலையிடுகிறாா்’ என்று சிசோடியா கூறினாா்.
முன்னதாக செவ்வாய்க்கிழமை, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், ‘பேகானி ஷாதி மே அப்துல்லா தீவானா’ என்ற ஹிந்தி பழமொழியைப் பயன்படுத்தி, துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவைத் தாக்கினாா். ‘அவா் என் தலைமை ஆசிரியா் அல்ல’ என்று கேஜரிவால் கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.