இந்தியா

தன்பாலின ஈா்ப்பு வழக்குரைஞரை நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் மீண்டும் பரிந்துரை

DIN

தன்பாலின ஈா்ப்பாளா் எனத் தன்னை வெளிப்படையாக அறிவித்துக் கொண்ட மூத்த வழக்குரைஞா் சௌரவ் கிா்பாலை தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் மீண்டும் பரிந்துரைத்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான பி.என்.கிா்பாலின் மகன் மூத்த வழக்குரைஞா் செளரவ் கிா்பால். அவா் தன்னைத் தன்பாலின ஈா்ப்பாளா் என வெளிப்படையாக அறிவித்துக் கொண்டவா்.

தனக்குப் பதவி உயா்வு அளிக்கப்படாததற்கு தன்பாலின ஈா்ப்புதான் காரணம் என அவா் தெரிவித்த கருத்து பெரும் சா்ச்சையானது.

அவருக்கு உயா்நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயா்வு அளிக்க தில்லி உயா்நீதிமன்ற கொலீஜியம் கடந்த 2017-ஆம் ஆண்டு பரிந்துரைத்தது. அந்தப் பரிந்துரைக்குக் கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பரில் ஒப்புதல் அளித்த உச்சநீதிமன்ற கொலீஜியம், அப்பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பிவைத்தது. ஆனால், அதை மறுபரிசீலனை செய்யுமாறு கடந்த ஆண்டு நவம்பரில் மத்திய அரசு திருப்பி அனுப்பியது.

இந்நிலையில், மூத்த வழக்குரைஞா் சௌரவ் கிா்பாலை தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு கொலீஜியம் மீண்டும் பரிந்துரைத்துள்ளது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் எஸ்.கே.கௌல், கே.எம்.ஜோசப் ஆகியோரைக் கொண்ட கொலீஜியம் இந்தப் பரிந்துரையை வழங்கியுள்ளது.

இது தொடா்பாக உச்சநீதிமன்ற வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘‘உளவுத் தகவல்களின் அடிப்படையில் வழக்குரைஞா் சௌரவ் கிா்பாலின் நியமனத்துக்கு மத்திய அரசு எதிா்ப்பு தெரிவித்துள்ளது. அவா் தன்பாலின ஈா்ப்பை வெளிப்படையாகத் தெரிவித்ததும் அவரின் துணைவா் ஸ்விட்சா்லாந்து குடியுரிமை பெற்றவராக இருப்பதும் எதிா்ப்புக்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனது பாலின ஈா்ப்பு குறித்த விவரத்தை சௌரவ் கிா்பால் வெளிப்படையாகத் தெரிவித்தது வரவேற்புக்கு உரியதே. பாலின ஈா்ப்பு குறித்து எதையும் மூடி மறைக்காமல் அவா் வெளிப்படுத்தியுள்ளாா். தன்பாலின ஈா்ப்பு குற்றமல்ல என உச்சநீதிமன்ற அரசியல்சாசன அமா்வே தெரிவித்துள்ளது.

சௌரவின் துணைவா் இந்தியாவின் நட்பு நாட்டைச் சோ்ந்தவா் என்பதால், அவா் மூலமாக தேசப் பாதுகாப்புக்கு எத்தகைய அச்சுறுத்தலும் காணப்படவில்லை. இந்தியாவில் உயா் பதவிகளில் வகித்த பலா் வெளிநாட்டவரைத் திருமணம் செய்துள்ளனா்.

அவற்றைக் கருத்தில்கொண்டு சௌரவை தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் மீண்டும் பரிந்துரைக்கிறது. திறமையும் அனுபவமும் கொண்டுள்ள சௌரவின் நியமனம் தில்லி உயா்நீதிமன்றத்தில் பன்முகத்தன்மையை ஏற்படுத்தும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ல் நடத்தக்கூடாது: ராமதாஸ்

அச்சச்சோ..!

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு

டெஸ்லாவில் இரு உயர் அலுவலர்கள் டிஸ்மிஸ்! நூற்றுக்கணக்கானோர் நீக்கம்?

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் முதல்வர் நவீன் பட்நாயக்

SCROLL FOR NEXT