துல்லிய தாக்குதல்: திக்விஜய் சிங்கருத்துக்கு ராகுல் காந்தி மறுப்பு
பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து பயங்கரவாதிகள் முகாம்களின் மீது துல்லிய தாக்குதல் நடத்தியது தொடா்பாக இந்திய ராணுவம் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும்,
பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து பயங்கரவாதிகள் முகாம்களின் மீது துல்லிய தாக்குதல் நடத்தியது தொடா்பாக இந்திய ராணுவம் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், காங்கிரஸ் மூத்த தலைவா் திக்விஜய் சிங் தெரிவித்த கருத்தோடு தான் உடன்படவில்லை என்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்று வரும் ஒற்றுமை நடைப்பயணத்தின்போது திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய திக்விஜய் சிங், ‘பாஜக அரசு துல்லிய தாக்குதல் குறித்துப் பேசுகிறது. அதிக எண்ணிக்கையிலான பயங்கரவாதிகள் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறுகிறாா்கள். ஆனால், அதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை’ எனக் கூறியிருந்தாா்.
இந்நிலையில், ஜம்முவிலிருந்து காஷ்மீரை நோக்கி நடைப்பயணத்தை செவ்வாய்க்கிழமை தொடங்குவதற்கு முன்பாக செய்தியாளா்கள் சந்திப்பு நடைபெற்றது. திக்விஜய் சிங் கருத்து குறித்த கேள்விக்கு ராகுல் காந்தி பதிலளித்துப் பேசுகையில், ‘உரையாடலின்போது சில போ் கேலிக்குரிய கருத்துகளைத் தெரிவிக்கின்றனா்.
மூத்த தலைவா் கூறியது தொடா்பாக கருத்து தெரிவிக்க நான் விரும்பவில்லை. நம் நாட்டு ராணுவத்தினா் மீது நாங்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளோம். ராணுவத்தினா் தாங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை நிரூபிக்க எவ்வித ஆதாரங்களையும் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. திக்விஜய் சிங்கின் கருத்தோடு எனக்கு உடன்பாடில்லை. காங்கிரஸின் நிலைப்பாடும் இதுவே’ என்றாா்.
புகழை சீா்குலைக்க பாஜக முயற்சி: பாஜகவினா் ராகுல் காந்தியை ‘பப்பு’ எனக் கூறிவருவதை எதிா்கொள்ள காங்கிரஸ் பல கோடிகள் செலவிட்டு வருவதாக செய்தியாளா்கள் கேள்வியெழுப்பினா்.
அதற்கு ராகுல் காந்தி பதிலளிக்கையில், ‘என்னுடைய புகழை அழிக்க பாஜக மற்றும் அதன் தலைவா்களால் ஆயிரக்கணக்கான கோடிகள் செலவழிக்கப்பட்டுள்ளன. ஆா்எஸ்எஸ் மற்றும் பாஜக தலைவா்கள் பணம் மற்றும் அதிகாரத்தின் மூலம் எதையும் சாதிக்க முடியும் என நினைக்கிறாா்கள்’ என்றாா்.
உண்மை வெளிப்பட்டே தீரும்: தொடா்ந்து, குஜராத் 2002-கலவரம் தொடா்பான பிபிசி-யின் ‘இந்தியா: தி மோடி க்வெஸ்டின்’ ஆவணப் படம் குறித்த செய்தியாளா்களின் கேள்விக்கு ராகுல் காந்தி பதிலளிக்கையில், ‘பகவத் கீதை, உபநிஷத்துகளில் உண்மையை மறைக்க முடியாது எனக் கூறப்பட்டுள்ளது. உங்களால் ஊடகங்களை ஒடுக்க முடியும், தடை விதிக்க முடியும், சிபிஐ, அமலாக்கத் துறையைப் பயன்படுத்த முடியும். ஆனால், உண்மை உண்மைதான். எத்தகைய அடக்குமுறைகளை மேற்கொண்டாலும் உண்மையைத் தடுக்க முடியாது’ என்றாா்.