முகப்பு
இந்தியா

பெண்ணையாறு விவகாரம்: விசாரணையில் இருந்து 2 உச்சநீதிமன்ற நீதிபதிகள் விலகல்

பெண்ணையாறு நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக கர்நாடகம், தமிழகம் மாநிலங்களுக்கு இடையே நிலவும் பிரச்னை தொடர்பான வழக்கை

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:17 PM
உச்சநீதிமன்றம் (கோப்புப்படம்)
பகிர்:

பெண்ணையாறு நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக கர்நாடகம், தமிழகம் மாநிலங்களுக்கு இடையே நிலவும் பிரச்னை தொடர்பான வழக்கை விசாரிப்பதில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் புதன்கிழமை விலகினர். இவர்கள் இந்த இரு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் இந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகினர்.
 தமிழகத்தின் அனுமதியின்றி பெண்ணையாற்றின் கிளை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடகம் தடுப்பணை கட்டுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் 2018-இல் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.
 அதில், "பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டக் கூடாது. இந்த விவகாரத்தில் ஏற்கெனவே உள்ள நிலைமைதான் தொடர வேண்டும். மேலும், மார்க்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடக அரசால் கட்டப்படும் தடுப்பணை, தமிழகத்தின் குடிநீர் ஆதாரத்தைப் பாதிக்கும். மேலும், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் தாவா தீர்ப்பாயத்தை அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இதேபோன்று கர்நாடக அரசு மேற்கொள்ளும் வேறு நீர்த் திட்டங்களுக்கும் தடை விதிக்க வேண்டும்' என்று கோரப்பட்டிருந்தது.
 இந்த விவகாரத்தில் தமிழக அரசின் மனுவுக்கு கர்நாடகம் தரப்பில் தாக்கல் செய்த பதிலில், "தமிழக அரசு தொடர்ந்த வழக்கானது விசாரணைக்கு ஏற்புடையதல்ல. இந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும், மார்க்கண்டேய நதியின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணை குடிநீர்த் திட்டத்துக்கானது. இதனால், தமிழகத்துக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
 இந்த வழக்கை கடந்த 2019, நவம்பரில் விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழக அரசின் மனுவைத் தள்ளுபடி செய்தது. அதேவேளையில், தீர்ப்பாயம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசிடம் உரிய மனுவை அளிக்குமாறும் அறிவுறுத்தியது. இதைத் தொடர்ந்து, மத்திய அரசுக்கு தமிழக தரப்பில் 2019-ஆம் ஆண்டு நவம்பரில் மனு அனுப்பப்பட்டது. இந்த நிலையில், மனு அளித்தும் நதிநீர் தாவா தீர்ப்பாயம் அமைக்கப்படவில்லை என்று கூறி தமிழக அரசின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
 இந்த விவகாரம் கடந்த ஆண்டு டிசம்பரில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தீர்ப்பாயம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மூன்று மாதத்தில் அமைக்க உச்சநீதிமன்றம் அவகாசம் அளித்திருந்தது. அதன்பிறகு, பெண்ணையாறு நதிநீர் தாவா தீர்ப்பாயம் அமைக்கவும், அது தொடர்பான அரசிதழ் அறிவிக்கை வெளியிடவும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடந்த மே 2-ஆம் தேதி ஒரு மாத அவகாசம் அளித்திருந்தது.
 இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் தொடர்புடைய மாநிலங்களை சார்ந்தவர்கள் தாங்கள் என்பதால், வழக்கில் இருந்து விலக விரும்புவதாக நீதிபதிகள் கூறினர்.
 இது தொடர்பாக நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவில் , "உச்சநீதிமன்ற பதிவுத் துறை தலைமை நீதிபதியிடம் இருந்து உத்தரவு பெற்று, உரிய அமர்விடம் இந்த விவகாரத்தை பட்டியலிட வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரை ஜி.உமாபதி, கூடுதல் தலைமை வழக்குரைஞர் வி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஆஜராகி இருந்தனர். இந்த விவகாரத்தை விசாரிக்கவிருந்த நீதிபதி ஏ.எஸ். போபண்ணா கர்நாடகத்தையும், நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் தமிழ்நாட்டையும் சேர்ந்தவர்கள் ஆவர்.
 2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு தாக்கல் செய்த வழக்கில் மத்திய ஜல் சக்தி அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் சில தினங்களுக்கு முன் தாக்கல் செய்த சுருக்கமான பிரமாணப் பத்திரத்தில், "1956-ஆம் ஆண்டு மாநிலங்களுக்கு இடையேயான நீர்த் தகராறுகள் சட்டத்தின் (1956) கீழ் பெண்ணையாறு நதிநீர் தாவா தீர்ப்பாயம் அமைப்பதற்கான முன்மொழிவு அமைச்சரவை செயலகத்தில் பரிசீலனைக்காகவும், மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காகவும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சரவை இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.