முகப்பு
இந்தியா

9.2 டிஎம்சி தண்ணீரை காவிரியில் கர்நாடகம் திறந்துவிட வேண்டும்: மத்திய அமைச்சரிடம் துரைமுருகன் நேரில் வலியுறுத்தல்

காவிரியில் தமிழகத்துக்கு ஜூன் மற்றும் ஜூலை 3 -ஆம் தேதி வரையில் வழங்க வேண்டிய 9.2 டிஎம்சி தண்ணீரை உடனே திறந்துவிட கர்நாடகத்தை வலியுறுத்த வேண்டும் என,

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:17 PM
 தில்லியில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை புதன்கிழமை சந்தித்து மனு அளித்த நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்.  உடன், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலர் சந்தீப் சக்ஸேனா.
பகிர்:

காவிரியில் தமிழகத்துக்கு ஜூன் மற்றும் ஜூலை 3 -ஆம் தேதி வரையில் வழங்க வேண்டிய 9.2 டிஎம்சி தண்ணீரை உடனே திறந்துவிட கர்நாடகத்தை வலியுறுத்த வேண்டும் என, மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் புதன்கிழமை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.
 காவிரியில் கர்நாடக அணையிலிருந்து வரவேண்டிய நீர்வரத்தில் தடை ஏற்பட்டு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 85.97 அடியாகக் குறைந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 48 டிஎம்சியாக இருக்கும் நிலையில், காவிரி நீர்ப்பாசனத்துக்கான தண்ணீர் பற்றாக்குறையாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
 குறிப்பாக கேரளம், கர்நாடக காவிரி நீர்பிடிப்புப் பகுதியில் கடந்த ஜூன் மாதம் சுமார் 50 முதல் 60 சதவீத மழை (பற்றாக்குறை) பொய்த்துவிட்டதன் காரணமாக கர்நாடகம் அணைகளில் தண்ணீர் இருப்பு குறைந்துள்ளது.
 கர்நாடகத்தில் காவிரி தொடர்புடைய கபினி, ஹாரங்கி, ஹேமாவதி, கேஎஸ்ஆர் ஆகிய 4 அணைகளின் மொத்தக் கொள்ளளவான 114 டிஎம்சியில் தற்போது 32 டிஎம்சி (28 சதவீதம்) தண்ணீர் மட்டுமே உள்ளது. இந்த நிலையில், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட போதுமான தண்ணீர் அணைகளில் இல்லை என கர்நாடக மாநில துணை முதல்வர் சிவகுமார் கடந்த 1-ஆம் தேதி தெரிவித்தார்.
 தமிழகத்தில் உள்ள மேட்டூர் அணை நீர்மட்டமும் வேகமாகக் குறைந்து வருகிறது. இந்த நிலையில், மத்திய அரசின் மூலமாக கர்நாடகத்தை வலியுறுத்த தமிழக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன் தில்லிக்கு செவ்வாய்க்கிழமை வந்தார். மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை அவரது அலுவலகத்தில் அமைச்சர் துரைமுருகன் புதன்கிழமை சந்தித்துப் பேசினார். அவருடன் தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலர் சந்தீப் சக்ஸேனா ஆகியோரும் இருந்தனர்.
 பின்னர், அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்துக்கு நியாயமாக ஜூன் மாதமும் ஜூலை 3 -ஆம் தேதி வரையிலும் 12.213 டிஎம்சி தண்ணீர் கர்நாடக அணைகளிலிருந்து காவிரியில் திறந்துவிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை 2.99 டிஎம்சி தண்ணீர்தான் கிடைத்துள்ளது. கிட்டதட்ட 9.220 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப்படாமல் உள்ளது.
 இந்த நிலை தொடர்ந்தால், காவிரி டெல்டா பகுதிகளில் பயிர் சாகுபடி பிரச்னை மோசமடைந்துவிடும். இது குறித்து உச்சநீதிமன்ற உத்தரவின்படி கேள்வி எழுப்ப வேண்டிய பொறுப்பு காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு உண்டு. இதனால், ஆணையத்துக்குப் பொறுப்பு வகிக்கும் மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து வலியுறுத்திப் பேசினேன். பற்றாக்குறை தண்ணீரைத் திறந்துவிட கர்நாடகத்தை வலியுறுத்தும்படி கோரிக்கை விடுத்தேன்.
 இதையடுத்து, அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் மூலமாக நடவடிக்கை எடுக்க தனது துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.
 தண்ணீர் பற்றாக்குறை குறித்து காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்துக்கு கடந்த ஜூலை 2-ஆம் தேதி தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. தமிழக நீர்வளத் துறைச் செயலர் சந்தீப் சக்úஸனா தற்போது நேரடியாகவும் சந்தித்து முறையிட்டுள்ளார். முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்த கட்டுமானப் பொருள்களை எடுத்துச் செல்லும் விவகாரத்தில் சாலை வசதிகள் செய்து தரும்படி கேரளத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்னும் அந்த வசதிகள் செய்து தரப்படவில்லை. கேரளம் விரைவில் செய்து தரும் என நம்புகிறோம் என்றார் அமைச்சர் துரைமுருகன்.
 பிரகலாத் ஜோஷியுடன் சந்திப்பு: கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சராகவும் உள்ள துரைமுருகன், அது தொடர்பான விவகாரங்களுக்கு மத்திய சுரங்கங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியையும் தில்லி அசோகா சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.
 சில கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் மத்திய அமைச்சரிடம் மனு அளித்ததாக மத்திய அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
 அப்போது தமிழக இயற்கை வளங்கள் துறைச் செயலர் பணீந்திர ரெட்டி, மத்திய சுரங்கங்கள் துறை அமைச்சக அதிகாரிகள் உடன் இருந்தனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.