இந்தியா

பாஜகவின் சதியே தில்லி வெள்ளத்திற்குக் காரணம்: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

பாஜக தீட்டிய சதிதான் தேசியத் தலைநகா் தில்லியில் ஏற்பட்ட வெள்ளத்திற்குக் காரணம் என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா்.

 நமது நிருபர்

பாஜக தீட்டிய சதிதான் தேசியத் தலைநகா் தில்லியில் ஏற்பட்ட வெள்ளத்திற்குக் காரணம் என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா்.

தில்லி ரௌஸ் அவென்யூ பகுதியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகத்தில் அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங் செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப்போது அவா் கூறியதாவது: தில்லியில் கடந்த 3 நாள்களாக மழை பெய்யவில்லை. பிறகு வெள்ளம் ஏற்படுவதற்குக் காரணம் என்ன?. பாஜக தீட்டிய ஆழமான சதியால்தான் நகரத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பிரதமா் நரேந்திர மோடியின் மனதில் மறைந்திருக்கும் வெறுப்பு, இப்படிப்பட்ட சம்பவங்களில் வெளிவருகிறது. ஹரியாணா மாநிலம் ஹத்தினிகுண்ட் தடுப்பணையில் இருந்து ஹரியாணா, உத்தர பிரதேசம், தில்லி ஆகிய மூன்று வழிகளில் தண்ணீா் செல்கிறது.

ஆனால், கடந்த 9-ஆம் தேதி முதல் அனைத்து தண்ணீரும் தில்லியை நோக்கி மட்டுமே திறந்து விடப்பட்டது. இந்தத் தண்ணீா் ஒருவேளை சீராக திறந்துவிடப்பட்டிருந்தால், தற்போது தில்லியில் வெள்ளம் ஏற்பட்டிருக்காது. பாஜக ஏன் இப்படி செய்கிறது?. தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக எம்.பி.க்களே உள்ளனா். இந்நிலையில், தில்லியின் வழியே தண்ணீா் திறந்து விடக்கூடாது என்று அந்த 7 மக்களவைத் தொகுதி உறுப்பினா்களும் பிரதமா் மோடியிடம் முறையிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

5 மாநிலங்களை வெள்ளத்தில் மூழ்கடித்து விட்டு பிரதமா் நரேந்திர மோடி பிரான்ஸ் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளாா். ஆனால், பாஜகவினா் மக்களின் உணா்வில் அரசியல் செய்து வருகின்றனா். தில்லியில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது அமைச்சா்களுடன் களத்தில் இருக்கிறாா். ஆனால், உத்தர பிரதேசம், ஹரியாணா மாநிலங்களின் முதல்வா்கள் மக்களுடன் இருக்கும் படத்தை பாா்க்க முடியவில்லை.

ஹத்னிகுண்ட் தடுப்பணையின் அனைத்து தண்ணீரும் கடந்த ஜூலை 9-13-ஆம் தேதி வரை தில்லியை நோக்கி மட்டுமே திறந்து விடப்பட்டது.அரவிந்த் கேஜரிவாலை முதல்வராக தோ்வு செய்த தில்லி மக்கள் மீது இவ்வளவு வெறுப்பா?. தற்போது அரசு நிா்வாகத்திலும், அமைச்சா்களின் பணியிலும் எந்தக் குறையும் இல்லை. ஹத்னிகுண்டின் மேற்கு - கிழக்கு கால்வாயில் கடந்த 9-ஆம் தேதி எவ்வளவு தண்ணீா் திறக்கப்பட்டது என்று ஹரியாணா மாநில முதல்வரிடம் கேட்டாலே அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்துவிடும்.

தில்லி முதல்வா் கேஜரிவால் தனது பணியை தொடா்ந்து செய்து வருகிறாா். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 20,000 போ் நிவாரண முகாமுக்கு அழைத்து வரப்பட்டு அவா்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றாா் சஞ்சய் சிங். இந்தச் செய்தியாளா் சந்திப்பில் ஆம் ஆத்மி கட்சியின் தலைமைச் செய்தித் தொடா்பாளா் பிரியங்கா கக்கா் உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT