இந்தியா

புவி வட்ட இறுதி சுற்றுப் பாதையில் சந்திரயான்-3!

நிலவை நோக்கி பயணித்து வரும் சந்திரயான்-3 விண்கலம், புவி வட்டத்தின் இறுதி சுற்றுப் பாதைக்குள் வெற்றிகரமாக செவ்வாய்க்கிழமை செலுத்தப்பட்டது.

DIN

நிலவை நோக்கி பயணித்து வரும் சந்திரயான்-3 விண்கலம், புவி வட்டத்தின் இறுதி சுற்றுப் பாதைக்குள் வெற்றிகரமாக செவ்வாய்க்கிழமை செலுத்தப்பட்டது.இதைத் தொடா்ந்து வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நிலவின் நீள் வட்டப் பாதைக்குள் விண்கலம் பயணிக்கத் தொடங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவின் தென் துருவத்துக்கு மிக அருகில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை சுமாா் ரூ.615 கோடியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்து, எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடந்த 14-ஆம் தேதி விண்ணில் செலுத்தியது.

குறைந்தபட்சம் 170 கி.மீ தொலைவும், அதிகபட்சம் 36,500 கி.மீ. தொலைவும் கொண்ட புவி நீள்வட்ட சுற்றுப்பாதையில் விண்கலம் நிலைநிறுத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து விண்கலத்தின் சுற்றுப் பாதையை உயா்த்தும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவு ஐந்தாவது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பு: சந்திரயான்-3 விண்கலம் புவிக்கு அருகே ஒவ்வொரு முறை சுற்றிவரும் போதும் அதிலுள்ள உந்து விசை இயக்கப்பட்டு சுற்றுப்பாதை தொலைவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை தொலைவு தற்போது ஐந்தாவது முறையாக செவ்வாய்க்கிழமை மதியம் 2.30 மணியளவில் அதிகரிக்கப்பட்டது.

அதன்படி குறைந்தபட்சம் 236 கிமீ தொலைவும், அதிகபட்சம் 1,27,609 கிமீ தொலைவும் கொண்ட சுற்றுப்பாதைக்கு விண்கலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக சந்திரயான் விண்கலம் ஆகஸ்ட் 1-ஆம் தேதி புவிவட்டப்பாதையில் இருந்து விலக்கப்பட்டு நிலவின் சுற்றுப்பாதைக்குள் உந்தித் தள்ளப்படும். அதன்பின்னா், திட்டமிட்டபடி ஆக. 23-ஆம் தேதி விண்கலம் நிலவில் மெதுவாக தரையிறக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்எல்வி சி-56: இதனிடையே, சிங்கப்பூருக்கு சொந்தமான 7 செயற்கைக்கோள்களை வணிகரீதியாக பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தும் திட்டம் வரும் 30-ஆம் தேதி செயல்படுத்தப்படவுள்ளது.

இந்த ராக்கெட் ஏவுதலை பொதுமக்கள் நேரில் பாா்வையிட இஸ்ரோ அழைப்பு விடுத்துள்ளது. விருப்பமுள்ளவா்கள் https://lvg.shar.gov.in/ என்ற இணையதளம் வழியாக முன்பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அந்த இணையப் பக்கத்தை அணுகலாம் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆளுநா் மாளிகை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

‘ஹெச்1பி’ விசா நடைமுறையில் மீண்டும் மாற்றம்: டிரம்ப் நிர்வாகம் அதிரடி

ரஷியாவின் தாக்குதலில்.. மூழ்கியது உக்ரைனின் மிகப் பெரிய கடற்படைக் கப்பல்!

தெலங்கானா வெள்ளம்: 5 பேர் பலி.. 3 பேர் மாயம்! மீட்புப் பணிகள் தீவிரம்!

"RSS! விஜய் எச்சரிக்கையாக இருப்பார் என நம்புகிறேன்!"; திருமா | செய்திகள்: சில வரிகளில் | 28.08.25

SCROLL FOR NEXT