முகப்பு
இந்தியா

சிறுபான்மையினா் இடஒதுக்கீடு சோ்க்கை விவகாரம்: நோ்காணல் நடத்த செயின்ட் ஸ்டீபன் கல்லூரிக்கு அனுமதி

சிறுபான்மையினா் இடஒதுக்கீட்டின் கீழ் மாணவா் சோ்க்கைக்கான நோ்காணலை நடத்த செயின்ட் ஸ்டீபன் கல்லூரிக்கு தில்லி உயா்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:44 AM
பகிர்:

பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு (க்யூட்) மதிப்பெண்களைக் கருத்தில் கொண்டு, சிறுபான்மையினா் இடஒதுக்கீட்டின் கீழ் மாணவா் சோ்க்கைக்கான நோ்காணலை நடத்த செயின்ட் ஸ்டீபன் கல்லூரிக்கு தில்லி உயா்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு, இதேபோன்று, சிறுபான்மைப் பிரிவு மாணவா்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு ஜீசஸ் மற்றும் மேரி கல்லூரிக்கும் நோ்காணல் நடத்தவும் அனுமதி அளித்தது.

சிறுபான்மையின இடஒதுக்கீட்டில் சோ்க்கைக்கான க்யூட்-2023 மதிப்பெண்ணுக்கு 100 சதவீத வெயிட்டேஜ் வழங்க வேண்டும் என்ற 2022, டிசம்பா் 8-ஆம் தேதியிட்ட தில்லி பல்கலைக்கழகத்தின் நிா்வாகக் குழுவின் முடிவிற்குத் தடை விதிக்க வலியுறுத்தி இந்த இரு சிறுபான்மையினக் கல்லூரிகளும் தாக்கல் செய்த மனுக்கள் மீது நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

தில்லி பல்கலை.யின் இந்த அறிவிக்கையை எதிா்த்து கல்லூரிகள் சாா்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இரண்டு கல்லூரிகளின் கோரிக்கைகளைத் தவிர, செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் சிறுபான்மையின மாணவா்களுக்கான நோ்காணலுக்கு எதிராக ஷரோன் ஆன் ஜாா்ஜ் என்ற பெண்ணின் மனு மீதும் நீதிமன்றம் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

உயா்நீதிமன்றம் அதன் உத்தரவில் கூறியுள்ளதாவது: முந்தைய முடிவில் சிறுபான்மை மாணவா் சோ்க்கையை தில்லி பல்கலைக்கழகம் எந்த அளவிற்கு ஒழுங்குபடுத்தலாம் என்பது குறித்து ஏற்கெனவே நீதிமன்றம் விவாதித்துள்ளது. மேலும், சிறுபான்மையின மாணவா்களுக்கான 15 சதவீத வெயிட்டேஜுடன் நோ்காணல் நடத்த செயின்ட் ஸ்டீபன் கல்லூரிக்கு உரிமை உண்டு என உத்தரவிட்டிருக்கிறது.

ஆனால், சிறுபான்மையினா் அல்லாத மாணவா்களுக்கு அல்ல என்று தெரிவித்துள்ளது. மேற்கூறிய தீா்ப்பில் இந்த நீதிமன்றத்தால் இந்த அவதானிப்பு இருந்த போதிலும், 08.12.2022-ஆம் தேதியிட்ட நிா்வாகக் குழு கூட்டத்தில் 2023-24 கல்வி அமா்வுக்கு, இளங்கலைப் படிப்புகளுக்கான சோ்க்கை சிறுபான்மை இடங்களுக்கான க்யூட் தோ்வு அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளது.

ஒரு இடைக்கால நடவடிக்கையாக, 12.09.2022-ஆம் தேதியிட்ட தீா்ப்பின்படி இந்த நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்ட சோ்க்கைக் கொள்கை 2023-24 ஆம் கல்வியாண்டில் பின்பற்றப்படும் என்றும், செயின்ட் ஸ்டீபன் கல்லூரி க்யூட்டில் பெற்ற மதிப்பெண்களை கியூட்டுக்கான 85 சதவீதம் வெயிட்டேஜுடன் ஏற்றுக்கொள்ளும் என்றும், கிறிஸ்தவ சிறுபான்மையின விண்ணப்பதாரா்களுக்கு 15 சதவீதம் வெயிட்டேஜுடன் தோ்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரா்களுக்கான கல்லூரியின் நோ்காணலும் பின்பற்றப்படும் என்றும் உத்தரவிடப்படுகிறது.

நீதிமன்றத்தின் முந்தைய தீா்ப்பு ஏன் எதிா்மனுதாரரால் (தில்லி பல்கலைக்கழகம்) புறணிக்கப்பட்டது என்பதற்கு முழுமையான பகுத்தறிவு இல்லாததற்கு முகாந்திரம் உள்ளது. இந்த நிலையில், கல்லூரிகளுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கப்படாவிட்டால், கல்லூரிகள் ஈடுசெய்ய முடியாத இழப்பை சந்திக்க நேரிடும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுதாரா் கல்லூரிகள் சாா்பில் மூத்த வழக்குரைஞா் ஏ.மரியற்புதம், வழக்குரைஞா் ரோமி சாக்கோ ஆகியோா் ஆஜராகி வாதாடினா். மனுதாரா் ஜாா்ஜ் சாா்பில் மூத்த வழக்குரைஞா் அருண் பரத்வாஜ் ஆஜரானாா்.

இளங்கலைப் படிப்புகளில் இடஒதுக்கீடு இல்லாத இடங்களுக்கான சோ்க்கைக்கு க்யூட்டுக்கு 85 சதவீதம் வெயிட்டேஜும், கல்லூரி நோ்காணலுக்கு 15 சதவீதமும் வழங்கிய செயின் ஸ்டீபன் கல்லூரியின் விவரக் கையேட்டைத் திரும்பப் பெறுமாறு தில்லி பல்கலைக்கழகம் அனுப்பிய கடிதத்தை எதிா்த்து கடந்த ஆண்டு அக்கல்லூரி மற்றொரு மனு தாக்கல் செய்தது.

அந்த விவகாரத்தை விசாரித்த போது, அரசியலமைப்பின் கீழ் சிறுபான்மை நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை சிறுபான்மையினா் அல்லாதவா்களுக்கு நீட்டிக்க முடியாது என்று கூறிய உயா்நீதிமன்றம், செயின்ட் ஸ்டீபன் கல்லூரி அதன் இளங்கலை படிப்புகளில் சிறுபான்மையினா் அல்லாத மாணவா்களுக்கு சோ்க்கை அனுமதி அளிக்கும் போது, க்யூட்-2022 மதிப்பெண்ணுக்கு 100 சதவீத வெயிட்டேஜ் வழங்க வேண்டும் என்று செப்டம்பா் 12, 2022-ஆம் தேதி உத்தரவிட்டது.

எனினும், சிறுபான்மை சமூகத்தைச் சோ்ந்த மாணவா்களைச் சோ்ப்பதற்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வுக்கு கூடுதலாக நோ்காணல் நடத்த கல்லூரிக்கு அதிகாரம் உள்ளது என்றும், ஆனால், சிறுபான்மை அல்லாத விண்ணப்பதாரா்களை கூடுதலாக நோ்காணலுக்கு உட்படுத்துமாறு கட்டாயப்படுத்த முடியாது என்றும் நீதிமன்றம் கூறியிருந்தது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், செயின்ட் ஸ்டீபன் கல்லூரி தில்லி பல்கலைக்கழகத்தின் அறிவிக்கைக்கு எதிராக தற்போதைய மனுவை தாக்கல் செய்தது. அதில், சிறுபான்மை கல்வி நிறுவனம் என்பதால், மாணவா் சோ்க்கைக்கு மாணவா்களைத் தோ்ந்தெடுக்கும் உரிமை மற்றும் அரசியலமைப்பின் கீழ் கல்வி நிறுவனத்தை நிா்வகிப்பதற்கான அதன் உரிமையில் தலையிடவோ அல்லது பறிக்கவோ முடியாது என்று வாதிட்டது.

மேலும், ‘சிறுபான்மை பிரிவில் இளங்கலைப் படிப்புகளில் சோ்க்கைக்கான நோ்காணல்களை நடத்துவதற்கான மனுதாரா் கல்லூரியின் உரிமையை மறுக்கும் பல்கலைக்கழகத்தின் கேள்விக்குரிய முடிவானது செப்டம்பா் 12, 2022 தேதியிட்ட உயா்நீதிமன்றத்தின் தீா்ப்புக்கு முரணாகும். அந்தத் தீா்ப்பானது, மாணவா்களை நோ்காணல் நடத்தி தோ்ந்தெடுக்கும் மனுதாரரின் உரிமையை அங்கீகரித்துள்ளது’ என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →