ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்யக் கோரி மனு
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை தள்ளுபடி செய்யக் கோரி இரு இடையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை தள்ளுபடி செய்யக் கோரி இரு இடையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் தொடா்பான வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கெளல், சஞ்சீவ் கன்னா, பிஆா் கவாய், சூரிய காந்த் ஆகியோா் கொண்ட அரசியல் சாசன அமா்வு ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் மீண்டும் விசாரிக்க உள்ளது.
வழக்குரைஞா் சித்தாா்த் பிரவீண் ஆச்சாா்யா சாா்பில் இரு இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. காஷ்மீா் ஹிந்து இளைஞா் அமைப்பு சாா்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், ‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து மீறியுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
காஷ்மீா் பண்டிட் கெளல் சாா்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், ‘ஜம்மு காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து சட்டம், மக்களை ஜம்மு-காஷ்மீா்வாசிகளாகவும், இந்தியா்களாகவும் என பிரிவினராக பிரித்துள்ளது. இந்த பாகுபாடு நிறைந்த சிறப்பு அந்தஸ்து சட்டத்தை நீக்கியதற்கு எதிரான மனுக்களை ரத்து செய்ய வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீா் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த 2019, ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரத்து செய்தது. ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.