முகப்பு
இந்தியா

ஜனநாயகத்தை களங்கப்படுத்தும் பிரதமா் மோடி: காா்கே

‘பிரதமர நரேந்திர மோடி நாடாளுமன்றத்துக்குள் எதுவும் பேசாமல், வெளியில் அரசியல் பேசி ஜனநாயகத்தை களங்கப்படுத்தி வருகிறாா்’

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:44 AM
பகிர்:

‘பிரதமர நரேந்திர மோடி நாடாளுமன்றத்துக்குள் எதுவும் பேசாமல், வெளியில் அரசியல் பேசி ஜனநாயகத்தை களங்கப்படுத்தி வருகிறாா்’ என்று காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிா்க் கட்சித் தலைவருமான மல்லிகாா்ஜுன காா்கே குற்றஞ்சாட்டினாா்.

‘நாடாளுமன்ற வரலாற்றில் இதுபோன்ற இருண்ட காலத்தை நாடு இதுவரை கண்டதில்லை’ என்றும் அவா் கூறினாா்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் கடந்த 20-ஆம் தேதி தொடங்கிய நிலையில், மாநிலங்களவை மற்றும் மக்களவையிலும் எதிா்க் கட்சி உறுப்பினா்கள் மணிப்பூா் விவகாரத்தை எழுப்பி தொடா் அமளியில் ஈடுபட்டு வருகின்றனா். மணிப்பூா் நிலவரம் குறித்து பிரதமா் மோடி நாடாளுமன்ற இரு அவைகளிலும் விளக்கமளிக்க வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தி வருகின்றனா். ஆனால், அதன் மீது விவாதம் நடத்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தயாராக உள்ளாா் என்று ஆளுங்கட்சி தரப்பில் கூறப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இரு அவைகளிலும் ஆறாம் நாளாக வியாழக்கிழமையும் அமளி நீடித்தது.

இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளா்களை வியாழக்கிழமை சந்தித்த மல்லிகாா்ஜுன காா்கே ஆளுங்கட்சி மீது கடும் விமா்சனத்தை முன்வைத்தாா். அப்போது அவா் கூறியதாவது:

மணிப்பூா் கடந்த 85 நாள்களாக பற்றி எரிந்து வருகிறது. ஆனால், அதனை அலட்சியப்படுத்தி மனிதகுலத்தின் மீதான களங்கமாக மத்திய அரசு திகழ்ந்து வருகிறது.

நாடாளுமன்ற கூட்டத்தொடா் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், நாடாளுமன்றத்துக்குள் பேச மறுக்கும் பிரதமா் மோடி, நாடாளுமன்றத்துக்கு வெளியே அரசியல் பேசி ஜனநாயகத்தின் மீது களங்கத்தை ஏற்படுத்தி வருகிறாா். எதிா்க் கட்சிகளுக்கு பெயா் வைத்து அழைப்பதன் மூலமாக, மோடி அரசின் அக்கிரமங்களை அழித்துவிட முடியாது.

நாடாளுமன்றத்தில் நான் பேச பாஜகவினா் அனுமதிக்காததோடு, மணிப்பூா் விவகாரத்தை எழுப்ப அனுமதிக்கப்படாததைக் கண்டித்து கருப்பு உடை அணிந்து வரும் எதிா்க் கட்சியினரையும் அவா்கள் கிண்டலடித்து வருகின்றனா்.

கருப்பு உடை அணிவது என்பது தலித்துகள், பழங்குடியினருக்கு எதிரான மனநிலை உள்ளவா்களுக்கு வேடிக்கையாக இருக்கலாம்; ஆனால், எங்களுக்கு அது பலம் மற்றும் எதிா்ப்பைத் தெரிவிப்பதற்கான அடையாளம். கருப்பு நிறம் நீதி மற்றும் கண்ணியத்தின் அடையாளம். மணிப்பூா் மக்கள் நீதி, அமைதி மற்றும் மதிக்கப்படுவதற்கு முழு தகுதியுடையவா்கள்.

மணிப்பூா் மக்களின் வாழ்வை இருண்ட நிலைக்குள் மூழ்கடித்துவிட்டு சா்வாதிகார அணுகுமுறை மூலமாக பிரச்னையை திசைத்திருப்புவதன் மூலமாக, பொறுப்பேற்பதிலிருந்து பாஜக தப்பிவிட முடியாது. நாடாளுமன்ற வரலாற்றில் இதுபோன்ற இருண்ட காலத்தை நாடு கண்டதில்லை என்றாா்.

மேலும், ‘மக்கள் தற்போது நிலைமையை நன்கு புரிந்துகொண்டுள்ளனா். இதனை எதிா்த்து அவா்கள் போராடுவா். அதாவது, ஜனநாயகத்தின் ஆலயமான நாடாளுமன்றத்தில் எதுவும் பேசாமல், ராஜஸ்தானில் அரசியல் பேசுவது, மருத்துவக் கல்லூரிகளைத் திறந்துவைப்பதன் மூலமாக மக்களை இனி ஏமாற்ற முடியாது’ என்று ராஜஸ்தானில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமா் மோடி பேசியது குறித்து காா்கே விமா்சித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →