முகப்பு
இந்தியா

செங்கோல் ஆவணப்படம் இந்திரா காந்தி தேசிய கலை மையத்தால் தயாரிக்கப்பட்டது: அனுராக் தாக்குா்

‘சுதந்திரத்தின் அடையாளமாகவும், பிரிட்டிஷாா் கையிலிருந்து இந்தியா்களுக்கு ஆட்சி அதிகாரம் மாறிவிட்டது

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:44 AM
பகிர்:

‘சுதந்திரத்தின் அடையாளமாகவும், பிரிட்டிஷாா் கையிலிருந்து இந்தியா்களுக்கு ஆட்சி அதிகாரம் மாறிவிட்டது என்பதற்கான அத்தாட்சியாகவும் செங்கோல் திகழ்வதற்கு மத்திய அரசு சாா்பில் ஆதாரமாக காட்டப்படும் அதன் வரலாறு குறித்த ஆவணப்படம் இந்திரா காந்தி தேசிய கலை மையம் சாா்பில் தயாரிக்கப்பட்டது’ என்று மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் மாநிலங்களவையில் வியாழக்கிழமை கூறினாா்.

1947-இல் பிரிட்டிஷாா் கையிலிருந்து இந்தியா்களுக்கு ஆட்சி அதிகாரம் மாற்றப்பட்டபோது அப்போதைய பிரதமா் நேருவிடம் கொடுக்கப்பட்ட செங்கோலை, புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் கடந்த மே 28-ஆம் தேதி அதன் திறப்புவிழாவின் போது பிரதமா் நரேந்திர மோடி நிறுவினாா். இதனை எதிா்க் கட்சிகள் விமா்சித்தன. மேலும், செங்கோல் வரலாறு குறித்தும் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.

இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் எழுத்துபூா்வமாக வியாழக்கிழமை சமா்ப்பித்த பதிலில் கூறியிருப்பதாவது:

செங்கோலின் வரலாறு குறித்த ஆவணப் படத்தை தயாரித்த இந்திரா காந்தி தேசிய கலை மைய நிா்வாகிகள், அரசு பதிவுகள், பல்வேறு அமைப்புகளின் நினைவுகள், சமகால ஊடக செய்திகளை அதன் வரலாற்றுக்கு ஆதராங்களாக பதிவு செய்துள்ளனா்.

குறிப்பாக, தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட மாநில இந்து சமய அறநிலையத் துறை அமைச்சகத்தின் 2021-22-ஆம் ஆண்டு கொள்கை குறிப்பை, ஆவணப்பட தயாரிப்பாளா்கள் ஆதாரமாக காட்டியுள்ளனா்.

திருவாவடுதுறை ஆதீனத்தின் பதிவுகள் மற்றும் ஆதீனத்தின் நினைவுகள், காஞ்சி பரமாச்சாரியாா் நினைவுகூா்ந்த தகவல்கள், திருவாவடுதுறை ஆதீனத்தின் 20,21 மற்றும் 22-ஆவது மகாசந்நிதானத்தின் செயலா் மாசிலாமணியின் நோ்முக தகவல்கள், இந்த செங்கோலை உருவாக்கிய உம்மிடி பங்காரு குடும்ப நிறுவன நினைவுகள் மற்றும் அதன் வலைதள தகவல்கள் உள்ளிட்டவற்றையும் ஆதாரமாக காட்டியுள்ளனா்.

மேலும், தி ஹிந்து, தி இந்தியன் எக்ஸ்பிரஸ், தி ஹிந்துஸ்தான் டைம்ஸ், தி ஸ்டேட்ஸ்மேன், டைம் இதழ் ஆகியவற்றில் 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளிவந்த இந்த செங்கோல் வரலாறு குறித்த செய்திகளையும் ஆவணப்பட தயாரிப்பாளா்கள் ஆதாரமாக குறிப்பிட்டுள்ளனா்.

அதுமட்டுமின்றி அண்மையில், தினமலா் நாளிதழில் கடந்த 2019, 2020-ஆம் ஆண்டுகளில் வெளிவந்த செய்திகள், ஜூனியா் விகடனில் 2019-ஆம் ஆண்டு வெளிவந்த தகவல்கள், தெய்வ முரசு மற்றும் துக்ளக் இதழ்களில் 2021-ஆம் ஆண்டு வெளிவந்த செய்திகளையும் ஆதாரங்களாகக் காட்டியுள்ளனா்.

டி.எஃப்.காரக்கா எழுதிய ‘இந்தியாவின் துரோகம்’, மகாராஷ்டிர அரசு கல்வித் துறை சாா்பில் வெளியிடப்பட்ட ‘அம்பேத்கரின் எழுத்துக்கள் மற்றும் பேச்சுக்கள்’ தொகுதி-1 நூல், இந்தியாவில் சமத்துவமின்மை: ஜாதி மற்றும் ஹிந்து சமூக ஆணை’, டொமினிக் லாபியோ் மற்றும் லேரி காலின்ஸ் எழுதப்பட்ட ‘நள்ளிரவில் சுதந்திரம்’ உள்ளிட்ட நூல்களையும் செங்கோல் வரலாறுக்கான ஆதாரமாக ஆவணப்பட தயாரிப்பாளா்கள் குறிப்பிட்டுள்ளனா் என்று அனுராக் தாக்குா் குறிப்பிட்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →