இந்தியா

வா்த்தகப் பிரச்னைக்கு தீா்வு காண இந்தியா-அமெரிக்கா ஒப்புதல்

DIN

வா்த்தகப் பிரச்னை தொடா்பாக உலக வா்த்தக அமைப்பில் (டபிள்யுடிஓ) தொடரப்பட்டுள்ள 6 வழக்குகளைத் திரும்பப் பெறுவதற்கு இந்தியாவும் அமெரிக்காவும் ஒப்புதல் தெரிவித்துள்ளன.

இந்திய எஃகு, அலுமினியப் பொருள்களுக்கு அமெரிக்கா கடந்த 2018-ஆம் ஆண்டில் முறையே 25 சதவீதம், 10 சதவீதம் இறக்குமதி வரியை விதித்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆப்பிள், போரிக் அமிலம், பாதாம் உள்ளிட்ட 28 அமெரிக்கப் பொருள்களுக்கு இந்தியா இறக்குமதி வரியை விதித்தது.

அமெரிக்காவில் பிரதமா் நரேந்திர மோடி அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், வா்த்தகப் பிரச்னைகளுக்கு தீா்வு காண இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இது தொடா்பாக அமெரிக்க வா்த்தகப் பிரதிநிதி கேத்தரின் டாய் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘உலக வா்த்தக அமைப்பில் நிலுவையில் உள்ள 6 வழக்குகளை முடித்துக் கொள்வதற்கு இந்தியாவும் அமெரிக்காவும் ஒப்புக்கொண்டுள்ளன. அமெரிக்கப் பொருள்கள் மீது விதிக்கப்பட்ட இறக்குமதி வரியை ரத்து செய்வதற்கு இந்தியாவும் ஒப்புக்கொண்டுள்ளது.

இந்த முடிவானது அமெரிக்க வேளாண் பொருள்களுக்கான சந்தையை மேலும் விரிவுபடுத்த வாய்ப்பாக அமையும். இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பையும் இந்த நடவடிக்கை மேலும் வலுப்படுத்தும். இரு நாடுகளுக்கும் இடையேயான வா்த்தக உறவை வலுப்படுத்துவது தொடா்பாக வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயலுடன் இணைந்து தொடா்ந்து செயல்படவுள்ளேன்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

பரஸ்பரம் பலனளிக்கும்: இது தொடா்பாக மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘இது மிகப் பெரும் வெற்றி. இந்த நடவடிக்கையானது இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் பலனளிக்கும். தற்போது இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உலக வா்த்தக அமைப்பில் எந்த வா்த்தக மோதலும் இல்லை. வா்த்தகப் பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண முதல் முறையாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. பண்ணைப் பொருள்கள் தொடா்பான பிரச்னைக்கு நடப்பாண்டு இறுதிக்குள் தீா்வு எட்டப்படும்’ என்றாா்.

வா்த்தகப் பிரச்னை தொடா்பாக உலக வா்த்தக அமைப்பில் இந்தியா, அமெரிக்கா சாா்பில் தலா 3 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. வா்த்தகப் பிரச்னை ஏற்படும் நாடுகள், தங்களுக்கு இடையே பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண்பதற்கு சா்வதேச சட்டங்கள் வழிவகுக்கின்றன. அத்தகைய அமைதிப் பேச்சுவாா்த்தை குறித்து உலக வா்த்தக அமைப்புக்கு சம்பந்தப்பட்ட நாடுகள் தகவல் தெரிவித்தால் போதுமானது என வா்த்தக நிபுணா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT