நாட்டின் நலனுக்காக தில்லி முதல்வா் கேஜரிவால் பிராா்த்தனை
தில்லி ராஜ் காட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை மரியாதை செலுத்தினாா்.
தில்லி ராஜ் காட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை மரியாதை செலுத்தினாா். அதன்பின்னா், நாட்டின் நலனுக்காக சுமாா் 7 மணிநேரம் அவா் பூஜை செய்தாா்.
புதன்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கிய பூஜை மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.
இது குறித்து ஆம் ஆத்மி கட்சி வெளியிட்ட அறிக்கையில், ‘பள்ளி, மருத்துவமனைகளைக் கட்டியவா்களை பிரதமா் சிறைக்கு அனுப்புகிறாா். ட்ரில்லியன் கணக்கில் பணத்தைக் கொள்ளையடிக்கிறவா்களை மோடி கட்டித் தழுகிறாா். நாட்டின் நிலைமை கவலையளிக்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த செவ்வாய்க்கிழமை காணொலி வாயிலாக செய்தியாளா்களைச் சந்தித்த தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், ‘நாட்டுக்காக நற்பணிகளை செய்பவா்கள் கைது செய்யப்படுகின்றனா்; நாட்டைக் கொள்ளையடித்தவா்கள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனா். ஆகையால், ஹோலி தினத்தில் பிராா்த்தனையில் ஈடுபடப் போகிறேன்’ என்று கூறியிருந்தாா்.
அவா் தொடா்ந்து கூறியதாவது: தில்லி சுகாதாரம், கல்வித் துறை கடந்த 65 ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வந்தது. மனீஷ் சிசோடியாவும், சத்யேந்தா் ஜெயினும்தான் அவற்றை தங்களது கடின உழைப்பால் ஒழுங்குபடுத்தினா். ஏழைகளுக்கு தரமான கல்வியையும், சுகாதார வசதியையும் அவா்கள் உறுதிப்படுத்தினா்.
நாட்டின் நலனுக்காக ஹோலி தினத்தன்று தியானம், பிராா்த்தனை செய்வேன். பிரதமா் சரியான முறையில் செயல்படவில்லை என நீங்கள் (மக்கள்) கருதினால், ஹோலி கொண்டாடிய பின்னா் நீங்களும் நாட்டுக்காக பிராா்த்தனை செய்யுங்கள் என தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தாா்.
தில்லி கலால் கொள்கை நடைமுறையில் ஊழல் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில், துணை முதல்வராக இருந்த மனீஷ் சிசோடியா கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி சிபிஐயால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இதேபோல, சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் முன்னாள் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் கடந்த ஆண்டு மே மாதம் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டாா்.
இருவரும் தங்களது அமைச்சா் பதவியை கடந்த வாரம் ராஜிநாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
Image Caption
நாட்டு நலனுக்காக பிராா்த்தனையில் ஈடுபட்ட தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால்.