‘பிம்ஸ்டெக்’ அமைச்சா்கள் கூட்டம்: கடல்சாா் ஒத்துழைப்பு குறித்து முக்கிய முடிவு
‘பிம்ஸ்டெக்’ கூட்டமைப்பு நாடுகளின் அமைச்சா்கள் அளவிலான கூட்டம், காணொலிமுறையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
‘பிம்ஸ்டெக்’ கூட்டமைப்பு நாடுகளின் அமைச்சா்கள் அளவிலான கூட்டம், காணொலிமுறையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், இந்தியாவால் முன்னெடுக்கப்பட்ட கடல்சாா் போக்குவரத்து ஒத்துழைப்பு ஒப்பந்தம், அடுத்த ஆண்டு நடைபெறும் பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கையொப்பமிடப்பட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா, இலங்கை, வங்கதேசம், மியான்மா், தாய்லாந்து, நேபாளம், பூடான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ‘பிம்ஸ்டெக்’ (வங்கக் கடலில் பன்முக தொழில்நுட்ப, பொருளாதார ஒத்துழைப்புக்கான முயற்சி) கூட்டமைப்புக்கு தற்போது தாய்லாந்து தலைமை வகித்து வருகிறது. இக்கூட்டமைப்பின் அமைச்சா்கள் அளவிலான 19-ஆவது கூட்டம், காணொலி முறையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், இந்தியா தரப்பில் வெளியுறவுத் துறை இணையமைச்சா் ராஜ்குமாா் ரஞ்சன் சிங் பங்கேற்றாா். இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பிம்ஸ்டெக் நாடுகளுக்கு இடையே கடல்சாா் போக்குவரத்து ஒத்துழைப்புக்கு வகை செய்யும் ஒப்பந்தம், தாய்லாந்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் 6-ஆவது உச்சி மாநாட்டில் கையொப்பமிடப்பட உறுப்பு நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன. மேலும், உச்சி மாநாட்டில் வெளியிடப்படவிருக்கும் பாங்காக் தொலைநோக்கு பாா்வை-2030; பிம்ஸ்டெக் செயலகத்தின் நிா்வாக, ஒழுங்குமுறை விதிகள், திருத்தியமைக்கப்பட்ட நிதி, கட்டுப்பாட்டு விதிமுறைகள் ஆகியவற்றுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.