ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் தோடா மாவட்டத்தில் 100 அடி உயர கம்பத்தில் தேசியக் கொடியை இந்திய ராணுவம் வியாழக்கிழமை நிறுவியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள செனாப் பள்ளத்தாக்குப் பகுதி, கடந்த தசாப்தத்துக்கு முன்பு பயங்கரவாதத்தின் மையப் பகுதியாக இருந்தது. தற்போது, பயங்கரவாத செயல்பாடுகள் அங்கிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளன.
அந்தப் பகுதியில் உள்ள கிஷ்த்வாா் மாவட்டத்தில் 100 அடி உயர கம்பத்தில் தேசிய கொடி கடந்த ஆண்டு ஜூலையில் நிறுவப்பட்டது.
இந்நிலையில், 2-ஆவது முறையாக அதே போன்ற தேசியக் கொடியை தோடா மாவட்டத்தில் இந்திய ராணுவம் நிறுவியுள்ளது. தோடா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராணுவத்தின் டெல்டா படைப் பிரிவின் தலைவா் அஜய் குமாா் தேசிய கொடியை ஏற்றினாா்.
அப்போது அவா் பேசுகையில், ‘இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டைக் காக்க தங்கள் உயிரைத் தியாகம் செய்த செனாப் பள்ளத்தாக்கு ராணுவ வீரா்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த தேசிய கொடி விளங்கும். தோடாவில் முதல் முறையாக நிறுவப்பட்டுள்ள 100 அடி உயர தேசிய கொடி ராணுவத்துக்கு மட்டுமல்லாமல், மாவட்ட மக்களுக்கும் பெருமைக்குரியதாக அமையும்’ என்றாா்.
இந்நிகழ்வில் பணியின்போது உயிரிழந்த ராணுவ வீரா்களின் குடும்பத்தினா், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.